ஒட்டாவா: டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் கனடா அணியின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தில்பிரீத் பாஜ்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைத்துலக அளவில் 22 வயதான பாஜ்வா இதுவரை ஒன்பது ஒருநாள் போட்டிகளிலும் 17 டி20 போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார்.
வரும் பிப்ரவரி 7 தொடங்கி மார்ச் 8 வரை இந்தியா, இலங்கை நாடுகளில் டி20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடக்கவுள்ளன.
இரண்டாம் முறையாக டி20 உலகக் கிண்ணத்தில் விளையாடும் கனடா, இம்முறை தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகிய அணிகளுடன் ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது.
அவ்வணி முதலாவதாக பிப்ரவரி 9ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கவுள்ள போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்தாடவுள்ளது. கனடா விளையாடும் முதல் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே நடக்கவுள்ளன.
அனைத்துலக டி20 போட்டிகளில் பாஜ்வா இதுவரை நான்கு அரைசதங்களை விளாசியுள்ளார். பந்தடி விகிதம் 133.22.
அமெரிக்க வட்டாரத்திற்கான இறுதிச்சுற்றில் தான் விளையாடிய ஆறு போட்டிகளிலும் வென்று, கனடா டி20 உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னேறியது.
கடந்தமுறை டி20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடியபோது, அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் மட்டும் கனடா வெற்றிபெற்றது.

