தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா வெற்றிநடை

2 mins read
a875c94f-f91c-4c2d-9340-a98b45bdf90e
இங்கிலாந்து வீரர் ஹேரி புரூக் ஆட்டமிழந்ததைக் கொண்டாடும் தென்னாப்பிரிக்க அணியினர். - படம்: ஏஎஃப்பி

செயின்ட் லூசியா: குவின்டன் டி காக்கின் அற்புதமான அரைசதமும் பந்துவீச்சாளர்களின் துணிச்சலான செயல்பாடும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் ‘சூப்பர் 8’ சுற்றில் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) நடந்த முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்த தென்னாப்பிரிக்காவிற்குக் கைகொடுத்தன.

தென்னாப்பிரிக்க அணியை 163 ஓட்டங்களுக்குக் கட்டுப்படுத்தியபோதும் இங்கிலாந்து அணிக்கு வெற்றி கைகூடவில்லை.

அதிக வேகத்தில் பந்து வீசாதது தென்னாப்பிரிக்க அணிக்குப் பலனளித்தது. அதனால், ஐந்தாவது ஓவரிலிருந்து 11 ஓவர்வரையிலும் ஒரு பவுண்டரி அடிக்க முடியாமல் இங்கிலாந்து திணறியது.

நடுவரிசை வீரர்களான ஹேரி புரூக்கும் (53 ஓட்டங்கள்) லியம் லிவிங்ஸ்டனும் (33 ஓட்டங்கள்) இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 78 ஓட்டங்களைச் சேர்த்தது இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கை அளித்தது.

ஆனாலும், பதற்றமின்றி விளையாடிய தென்னாப்பிரிக்கா, ஏழு ஓட்டங்களில் வெற்றிபெற்று, நடப்பு டி20 உலகக் கிண்ணத் தொடரில் தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறது.

இத்தொடரில் கடைசிவரை பரபரப்பாகச் சென்று, தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற்றது இது மூன்றாவது முறை.

முன்னதாக, அவ்வணியின் தொடக்க வீரர் டி காக் 38 பந்துகளில் 65 ஓட்டங்களையும் அதிரடி வீரர் டேவிட் மில்லர் 28 பந்துகளில் 43 ஓட்டங்களையும் குவித்தனர்.

இவ்வெற்றியை அடுத்து, தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தோல்வி குறித்து இங்கிலாந்து அணித்தலைவர் ஜோஸ் பட்லரிடம் கேட்டபோது, “பவர்பிளே ஓவர்களில் சற்று சறுக்கிவிட்டோம் என நினைக்கிறேன். அதிரடியாக ஆட வேண்டும் என்ற நோக்குடன் டி காக் விளையாடினார். அதுபோல நாங்கள் விளையாடவில்லை.

“164 ஓட்டங்கள் என்ற இலக்கால் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனாலும், தென்னாப்பிரிக்க அணி சிறப்பாகப் பந்துவீசி, வெற்றியைத் தனதாக்கிக்கொண்டது,” என்று கூறினார்.

அரையிறுதிக்குத் தங்கள் அணி முன்னேற இன்னும் நல்ல வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்