தந்தை லாரி ஓட்டுநர், தாயார் இல்லத்தரசி. சொந்த ஊர் அரக்கோணம்.
ஏழு வயதிலிருந்து ‘தெக்வாண்டோ’ கற்றுவரும் திவாகர் லோகேஷ், 14, இந்தியாவுக்கு வெளியே சென்று பங்கேற்ற தமது முதல் போட்டியிலேயே தங்கம் வென்று சாதித்தார்.
டிசம்பர் 5 முதல் 7ஆம் தேதி வரை நடைபெற்ற 11வது டேடோ அனைத்துலகப் போட்டிகளில் ‘U14 பூம்சே ரெட்-டிப்’ பிரிவில் தங்க விருதையும், உயரக் குதித்து எத்துதலுக்கான பிரிவில் வெள்ளி விருதையும் திவாகர் வென்றார். ‘கியோருகி’ (நேரடிச் சண்டை) பிரிவில் காலிறுதிச் சுற்றுவரை சென்றார்.
அவரைப் போட்டிக்கு அழைத்துவந்த தற்காப்புக் கலைஞர் யுவராஜ் லோகநாதன், 39, ‘U40 பூம்சே டான் (முதல் டானுக்கு மேற்பட்ட)’ பிரிவில் வெண்கலம் வென்றார்.
சென்ற ஆண்டு ‘பூம்சே’, மெய்நிகர் ‘தெக்வாண்டோ’ ஆகிய இரு பிரிவுகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற திரு யுவராஜ், இவ்வாண்டு மாணவரின் வெற்றியில் கவனம் செலுத்த விரும்பி ஒரே பிரிவில் போட்டியிட்டார்.
மாநில அளவில் ‘பூம்சே’யில் தங்க விருதுகளையும் தேசிய நிலையில் வெண்கல விருதுகளையும் ‘கேலோ இந்தியா’வில் இரண்டு தங்க விருதுகளையும் வென்றுள்ள பா. ரீ. சர்வாணி, திவாகருடன் வருவதாக இருந்தார். ஆனால், பள்ளித் தேர்வுகளை எழுதவேண்டியிருந்ததால் அவரால் வர இயலவில்லை.
முயற்சி திருவினையாக்கும்
இரண்டாம் வகுப்பில் படித்தபோது, திவாகர் தம் தாயாரிடம் தம்மை ஏதேனும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் சேர்க்கும்படி கேட்டார்.
திவாகரின் தாயார், திரு யுவராஜ் நடத்தும் ‘கலாம் யுவி தெக்வாண்டோ கிளப்’ வகுப்புகளுக்கு மகனை அனுப்பினார்.
தொடர்புடைய செய்திகள்
ஆர்வத்துடன் கற்றார் திவாகர். அதைக் கண்டு அகமகிழ்ந்த திரு யுவராஜ், பயிற்சிக்கூடத்துக்கான சாவியைத் தந்து திவாகருக்குப் பொறுப்புகளைத் தந்தார்.
கடந்த நான்கைந்து மாதங்களாக, திவாகர் அன்றாடம் அதிகாலை 4.30 மணிக்கு பயிற்சிக்கூடத்தைத் திறந்து காலை 6 மணிவரை அங்கு பயிற்சி செய்துவந்தார்.
பிறகு அவர், பள்ளிக்குச் சென்று வந்ததும், இரவில் மீண்டும் பயிற்சி.
வார இறுதி நாள்களில் அதிகாலை 5.30 மணிக்கு அவர், போட்டிக்குத் தயாராகிவரும் மாணவர்களை ஓட்டத்திற்கு அழைத்துச் செல்வார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக, திவாகர் தமிழ்நாடு ‘தெக்வாண்டோ’ போட்டிகளில் ‘பூம்சே’ பிரிவில் தங்க விருது வென்றுவருகிறார். அத்துடன் இந்திய தேசிய போட்டிகளில் ‘பூம்சே’யில் வெண்கல விருது வென்றும் சாதித்துள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டுகள், ஆசிய விளையாட்டுகள், ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவற்றில் பங்கேற்பதும், எதிர்காலத்தில் ராணுவத்தில் சேர்வதும் திவாகரின் லட்சியங்கள்.
அண்மையில் பஞ்சாப்பில் நடந்த தேசிய டேக்வாண்டோ போட்டியில் ‘பூம்சே’ பிரிவில் வெண்கலம் வென்றதுடன் ரயில் பயணத்தில் திவாகருக்கு ஓர் இந்திய ராணுவ வீரருடன் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. “உன்னால் முடியும், உன்னைப் பார்த்து கூடுதலானோர் ராணுவத்தில் சேரவேண்டும்” என அவர் கூறியது திவாகரை ஊக்கப்படுத்தியது.
ஆதரவாளர்கள் சுரேஷ், பார்த்திபன் ஆகியோரின் உதவியால் திவாகரை சிங்கப்பூருக்கு அழைத்துவருவது சாத்தியமானது.
“ராணிப்பேட்டை மாவட்ட தெக்வாண்டோ சங்கச் செயலாளர் எஸ் கோதண்டன், தமிழ்நாடு தெக்வாண்டோ சங்கத் தலைவர் டாக்டர் ஐசரி கே.கணேஷ், பொதுச் செயலாளர் செல்வமணி ஆகியோரும் பெரிதும் துணைபுரிந்தனர்,” என்றார் திரு யுவராஜ்.
“இனி திவாகருக்குத் தனியார் பள்ளியில் படிக்க ஆதரவு வாங்கித் தர விரும்புகிறேன். நான் கற்பிக்கும் மாணவர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்; நானும் ஒலிம்பிக் நடுவராக வேண்டும். இதுவே என் கனவு,” என்று திரு யுவராஜ் கூறினார்.
அப்துல் கலாம் வழியில் சேவை
டாக்டர் அப்துல் கலாமின் பெயரில் ‘கலாம் யுவி ‘தெக்வாண்டோ’ கிளப்’பை 2011ல் அரக்கோணத்தில் தொடங்கி மாணவர்களுக்குக் கற்பித்துவருகிறார் திரு யுவராஜ்.
‘கலாம் யுவி’ அறக்கட்டளையையும் பல்லாண்டுகளாக நடத்திவரும் திரு யுவராஜ், அதன்வழி மரம் நடுதல், திருக்குறள் கற்றுணர்தல், ஓவியம் வரைதல் எனப் பலவற்றையும் மாணவர்களுக்காக நடத்துகிறார்.
5,000 சதுர அடியில் டாக்டர் அப்துல் கலாம் ஓவியத்தை 100 மாணவர்கள் வரைந்து சாதனை படைத்துள்ளனர். திவாகர், ஒரு நிமிடத்தில் 30 திருக்குறள்களை ஒப்பிப்பார்.
2014ல் தொழில்நுட்பராகச் சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்த திரு யுவராஜ், சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக ‘தெக்வாண்டோ’ தலைமைப் பயிற்றுவிப்பாளர் மாஸ்டர் ஹென்ரி டானிடம் மாணவராகச் சேர்ந்தார். 2017ல், மாஸ்டர் லாய் ஹான் செங் தலைமையில் ‘ஜே ஹெச் கிம்’ தெக்வாண்டோ கழகத்தில் (புக்கிட் தீமா) முழுநேரப் பயிற்றுவிப்பாளராகச் சேர்ந்தார் மாஸ்டர் யுவராஜ்.
இதற்கிடையே, அரக்கோணத்திலிருந்த மாணவர்களுக்கும் இணையவழி ‘தெக்வாண்டோ’ கற்பித்தார்.
“மாணவர்களைக் காண பல கேமராக்களையும் என் வீட்டின் மொட்டைமாடியில் பொருத்தியிருந்தேன். என் மனைவியும் மேற்பார்வைக்கு உதவினார்,” என்றார் திரு யுவராஜ்.
ஆனால், தந்தைக்கு விபத்து நேர்ந்ததால் மீண்டும் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தார் திரு யுவராஜ். அங்கு அவர் தன் ‘தெக்வாண்டோ’ மன்றத்தை, அனைத்துலகக் கழகமாக விரிவுபடுத்தினார்; பயிற்சியைத் தனிக் கூடத்திற்கு மாற்றினார். எதிர்காலத்தில் வில்வித்தை, சுவர்ப்பந்து போன்ற மற்ற விளையாட்டுகளையும் தன் கழகத்தில் அவர் கற்பிக்க விரும்புகிறார்.
திரு யுவராஜுக்குப் பணத்தேவை சில நேரங்களில் ஏற்பட்டபோதும், ‘தெக்வாண்டோ’ கற்பிப்பதையும் அறநிறுவனத்தை நடத்துவதையும் அவர் நிறுத்தவில்லை. “நான் கற்பித்தலை விட்டுவிட நினைத்தாலும் என் மாணவர்கள் என்னை விடமாட்டார்கள். அடுத்து என்னென்ன செய்யலாம் என அவர்கள் என்னிடம் கேட்கின்றனர்,” என்றார் அவர்.
விளையாட்டுகள், அறிவியல், திருக்குறள் ஒப்புவித்தல் போன்றவற்றில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களுக்காக ஜனவரியில் பரிசளிப்பு விழாவை நடத்த அவர் திட்டமிடுகிறார்.

