மெல்பர்ன்: கிரிக்கெட் பயிற்சிகளில் இதுவரை நடப்பில் இருந்துவரும் பந்துவீச்சு இயந்திரத்தைப் பின்னுக்குத் தள்ளக்கூடிய புதிய இயந்திரம் அறிமுகமாகியுள்ளது.
பந்தடிப்பாளர் தனது திறன்களை முழுமையாக மேம்படுத்திக்கொள்ள பந்துவீச்சாளர் நேரடியாகப் பந்து வீசி பயிற்சி பெறுவது ஓரளவு அவசியமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கூடுமானவரை பந்துவீச்சாளர் இல்லாமல் பயிற்சி மேற்கொள்ள வகைசெய்யும் ஹைடிஸீ (HiTZ) எனும் இயந்திரம் இம்மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள சிட்டிபவர் சென்டர் நிலையத்தில் இந்த இயந்திரம் வெளியிடப்பட்டது.
பலவகை பந்தடிப்புப் பயிற்சிகளுக்கென பல்வேறு மாதிரி சூழல்களை ஏற்படுத்தித் தருவதே ஹைடிஸீக்கும் மற்ற பந்துவீச்சு இயந்திரங்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசமாகும்.
ஹைடிஸீயில் பந்து வீசப்படும் வேகத்தை மணிக்கு 72லிருந்து 128 கிலோமீட்டர் வரை பதிவுசெய்வது, பந்து சுழலவேண்டிய அளவைப் பதிவுசெய்வது போன்றவற்றைச் செய்யலாம். பயன்படுத்துபவரின் பாலினம், வயது போன்றவற்றுக்கு ஏற்றவாறும் ஹைடிஸீ மாற்றங்களைச் செய்யும் என்று தி கார்டியன் ஊடகம் தெரிவித்துள்ளது.
ஹைடிஸீக்கான தொழில்நுட்பத்தை பேட்ஃபாஸ்ட் (BatFast) நிறுவனம் வழங்குகிறது. அந்த தொழில்நுட்பத்தைக் கவனிக்கும் வில் வெசட்ஜ்வும் எனும் ஆடவர், ஹைடிஸீயில் ஒரு மில்லியனுக்கும் மேலான பரிமாணங்களை (variations) உருவாக்கிக்கொண்டு பயிற்சி மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

