ரொனால்டோவுக்கு பந்தை அனுப்ப எந்த அழுத்தமும் இல்லை: பிரான்சிஸ்கோ கொன்சேசாவ்

ரொனால்டோவுக்கு பந்தை அனுப்ப எந்த அழுத்தமும் இல்லை: பிரான்சிஸ்கோ கொன்சேசாவ்

2 mins read
2ccd7634-c838-4180-bc60-c19099725417
ஜூன் 17ஆம் தேதியன்று ஹூஸ்டன் விளையாட்டரங்கில் காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு எதிராக நடைபெற்ற 1-1 என்ற உலகக் கிண்ண சமநிலை ஆட்டத்தின்போது, ​​கிறிஸ்டியானோ ரொனால்டோ (இடது) மற்றும் போர்ச்சுகல் வீரர் பிரான்சிஸ்கோ கொன்சேசாவ். - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

காங்கோ ஜனநாயகக் குடியரசுடன் 1-1 என்ற கணக்கில் ஆட்டம் சமநிலையில் முடிந்ததைத் தொடர்ந்து, 41 வயதான ரொனால்டோவின் குறைந்த வேகம் போர்ச்சுகலின் வெற்றி வாய்ப்புகளில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறதா என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆனால், மற்ற சக வீரர்கள் சிறந்த தாக்குதல் நிலைகளில் இருக்கும்போது, ​​ரொனால்டோவுக்குப் பந்தை அனுப்ப வேண்டும் என்ற கட்டாயத்தில் வீரர்கள் இல்லை என்று கொன்சேசாவ் கூறினார்.

“அவருக்குப் பந்தைக் கொடுக்க வேண்டிய அவசியத்தை நாங்கள் உணரவில்லை,” என்று அந்த 23 வயது வீரர் கூறினார். “யார் சிறந்த நிலையில், யாரும் தடுக்காத நிலையில் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நான் பந்தை அனுப்புவேன்,” என்றார் அவர்.

ரொனால்டோ, அணியின் மற்றுமோர் உறுப்பினராகவே பார்க்கப்படுகிறார் என்றும், “அணியின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கு ஒவ்வொரு தனிநபரின் திறனும் தேவை,” என்றும் அவர் கூறினார்.

“கிறிஸ்டியானோ தனது விளையாட்டு வாழ்க்கையாலும், 41 வயதிலும் அவர் கொண்டிருக்கும் வெற்றி வேட்கையாலும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார். தலைமைத்துவத்திற்கும் அவர் அடிக்கும் கோல்களுக்கும் அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,” என்று அந்த யுவென்டஸ் வீரர் ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார்.

“கோல் அடிப்பதில் அவரைப் போல் வேறு யாரும் இல்லை. மற்ற வீரர்களைப் போலவே, அவரும் அணிக்கு உதவவே இங்கு இருக்கிறார்,” என்றும் கொன்சேசாவ் தெரிவித்தார்.

‘கே’ பிரிவில் தனது இரண்டாவது போட்டியில், ஜூன் 23ஆம் தேதியன்று ஹூஸ்டனில் போர்ச்சுகல் அணி உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. தனது பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்குவதற்குத் தேவையான மூன்று புள்ளிகளைப் பெற அந்த அணி தீவிரமாக முயல்கிறது.

குறிப்புச் சொற்கள்
ரொனால்டோகாங்கோவெற்றி