தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டி20: அடுத்தடுத்து சதமடித்து திலக் வர்மா சாதனை

2 mins read
5c013d2e-4422-479c-8532-fd95f4a058d1
சாதனையாளர் திலக் வர்மா. - படம்: www.ap7am.com / இணையம்

ராஜ்கோட்: டி20 கிரிக்கெட் ஆட்டங்களில் அடுத்தடுத்து மூன்று முறை சதமடித்துள்ளார் இந்திய பந்தடிப்பாளர் திலக் வர்மா.

டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக மூன்று இன்னிங்சில் சதமடித்திருக்கும் முதல் வீரர் என்ற பெருமையை 22 வயது திலக் பெற்றுள்ளார். இச்சாதனை, ஆண்கள், பெண்கள் கிரிக்கெட் என இருவகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் பொருந்தும்.

சையத் மு‌ஷ்டாக் அலி கிண்ணப் போட்டியில், குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் மேகாலயா அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் அணிக்கு சதமடித்தார் திலக். அந்த ஆட்டத்தில் அவர் 67 பந்துகளில் 151 ஓட்டங்களை விளாசினார்.

முன்னதாக தென்னாப்பிரிக்காவில் நடந்த இரண்டு டி20 ஆட்டங்களிலும் திலக் சதமடித்தார்.

நவம்பர் 15ஆம் தேதியன்று இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் திலக் 47 பந்துகளில் 120 ஓட்டங்களை விளாசினார். அதற்கு முன்பு 13ஆம் தேதி நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 56 பந்துகளில் 107 ஓட்டங்களைக் குவித்தார்.

அதோடு, டி20 கிரிக்கெட்டில் ஓர் ஆட்டத்தில் 150 ஓட்டங்களுக்கு மேல் குவித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் திலக் பெற்றுள்ளார். 2022ஆம் ஆண்டில் டி20 ஆட்டத்தில் 162 ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்த இந்திய வீராங்கனை கிரண் நவ்கிரேக்கு அடுத்த நிலையில் இருக்கிறார் திலக்.

மேகாலயாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 248 ஓட்டங்களை எடுத்தது. மேகாலயா, 69 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

சயத் மு‌ஷ்டாக் அலி போட்டியின் முதல் ஆட்டமான அதில் 179 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிகண்டது ஹைதராபாத்.

2025 இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) பருவத்தை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி தக்கவைத்துக்கொண்ட ஐந்து வீரர்களில் திலக்கும் ஒருவராவார்.

குறிப்புச் சொற்கள்