லண்டன்: இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவரான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வீரத்திருமகன் (knighthood) பட்டம் வழங்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டில் அனைத்துலகப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார் 42 வயது ஆண்டர்சன். 704 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள அவரே டெஸ்ட் போட்டிகளில் ஆக அதிக விக்கெட் வீழ்த்திய வேகப் பந்துவீச்சாளருமாவார்.
கடந்த 2002ல் அனைத்துலக ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான ஆண்டர்சன், அதற்கு அடுத்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கினார்.
இங்கிலாந்து அணிக்காக 20 ஆண்டுகளுக்குமேல் அவர் விளையாடியுள்ளார். 188 டெஸ்ட், 194 ஒருநாள், 19 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர், ஒட்டுமொத்தமாக 991 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில், ஆண்டர்சனுக்கு வீரத்திருமகன் விருது வழங்கப்படவிருப்பது குறித்துக் கருத்துரைத்த இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரிச்சர்ட் தாம்ப்சன், “உண்மையிலேயே அவர் அதற்கு அதிகத் தகுதியானவர். இங்கிலாந்து கிரிக்கெட்டிற்கு பெரும்பங்களித்துள்ள புகழாளர் அவர்,” என்று பாராட்டினார்.
“ஆண்டர்சனின் கிரிக்கெட் வாழ்க்கை வியத்தகு சாதனைகள் நிறைந்தது. தம்முடைய திறமை, மனவுறுதி, விளையாட்டில் நேர்மை ஆகிய பண்புகளால் உலகம் முழுதும் மில்லியன்கணக்கான கிரிக்கெட் வீரர்களையும் ரசிகர்களையும் அவர் ஈர்த்துள்ளார்,” என்றும் திரு தாம்ப்சன் மெச்சினார்.
அனைத்துலகப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றபோதும் கிரிக்கெட் ஆட்டக்காரராக ஆண்டர்சன் இன்னும் ஓய்வுபெறவில்லை. ரெட் ரோஸ் கவுன்டி சார்பில் உள்ளூர்ப் போட்டிகளில் விளையாட அவர் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார். ஆயினும், பயிற்சியின்போது கெண்டைக்காலில் காயமுற்றதால் அவரால் தொடக்கத்தில் சில போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

