ரெட் புல் எஃப்1 பயிற்சி திட்டத்தில் இரண்டு சிங்கப்பூர் மாணவிகள்

ரெட் புல் எஃப்1 பயிற்சி திட்டத்தில் இரண்டு சிங்கப்பூர் மாணவிகள்

2 mins read
2e8cffc8-0212-4a68-aa47-5ec535b475c5
சாரீஸ் சுவா (இடது), ஹெங் யி சின் (வலது) ரெட் புல் அணியின் தலைமை அலுவலகத்தில் இரண்டு மாதப் பயிற்சி திட்டத்தை மேற்கொள்வார்கள். - படம்: ரெட்புல்

எஃப் ஒன் கார் பந்தயத்தில் சீறிப்பாயும் அணிகளில் ரெட் புல் அணியும் ஒன்று. கடந்த மூன்று பருவங்களிலும் அதன் ஓட்டுநர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் முதலிடம் பிடித்து பட்டத்தை வென்றார்.

இந்நிலையில் ரெட் புல் எஃப்1 பயிற்சி திட்டத்தில் இரண்டு சிங்கப்பூர் மாணவிகளுக்கு இடம் கிடைத்துள்ளது. அவர்கள் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள்

இங்கிலாந்தில் உள்ள ரெட் புல் அணியின் தலைமை அலுவலகத்தில் அந்த மாணவிகள் இரண்டு மாதம் பயிற்சி திட்டத்தை மேற்கொள்வார்கள்.

காணொளி படைப்புகள், ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல் என பல நேர்காணல்களைக் கடந்து 22 வயது சாரீஸ் சுவா, 21 வயது ஹெங் யி சின் பயிற்சி திட்டத்திற்குத் தகுதி பெற்றனர்.

தகுதி பெற்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் காணொளி வாயிலாக பெயர்களை வெளியிட்டார்.

சிங்கப்பூரில் ரெட் புல் பானத்தை விநியோகிக்கும் ‘போக்கா’ நிறுவனம் கடந்த மார்ச் 21ஆம் தேதி இந்தப் பயிற்சி திட்டம் குறித்து அறிவித்தது.

வாழ்க்கையில் கிடைக்கும் மிக அரிதான வாய்ப்புகளில் ஒன்றான இதற்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.

“சில ஆண்டுகளுக்கு முன்னர் எஃப்1 பந்தயங்களால் ஈர்க்கப்பட்டேன். ரெட் புல் அணியில் இடம் கிடைப்பதெல்லாம் பெரும் கனவு என்று நினைத்துள்ளேன். பயிற்சித் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானதும் அதற்காக முழு வேகத்துடன் களமிறங்கினேன்,” என்றார் ஹெங்

தமது 15 வயதிலேயே எஃப் 1 கார் பந்தயத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை துளிர்விடத் தொடங்கியதாக சுவா கூறினார். பயிற்சி திட்டத்தில் நன்றாக செயல்படுவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

பயிற்சி திட்டத்தில் இரு மாணவிகளும் ரெட் புல் அணியின் பொறியியல், தளவாடங்கள் என பல பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்வார்கள். 

குறிப்புச் சொற்கள்