அசுன்சியோன் (பராகுவே): லத்தீன் அமெரிக்க கண்டத்துக்கான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டித் தகுதிச் சுற்று ஆட்டத்தில் பராகுவேயிடம் 2-1 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்தது அர்ஜென்டினா.
உலகக் கிண்ணப் போட்டி, கோப்பா அமெரிக்கா போட்டி ஆகிய இரண்டின் நடப்பு வெற்றியாளரான அர்ஜென்டினா, ஆட்டத்தில் முதலில் முன்னுக்குச் சென்றது. இத்தாலிய குழுவான இன்டர் மிலானுக்கு விளையாடும் மாவ்ரோ ஐக்கார்டி அர்ஜென்டினாவை முன்னுக்கு அனுப்பினார்.
ஆனால், எட்டு நிமிடங்களுக்குப் பிறகு கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார் பராகுவேயின் அன்டோனியோ சனாப்ரியா. பிற்பாதியாட்டம் தொடங்கி இரண்டே நிமிடங்களில் ஓமார் அல்டெரெட்டே பராகுவேயின் வெற்றி கோலைப் போட்டார்.
ஆட்டத்தில் தோல்வியடைந்திருந்தாலும் லத்தீன் அமெரிக்க கண்டத்துக்கான தகுதிச் சுற்றுப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது அர்ஜென்டினா.
பிரேசிலும் வெனிசுவேலாவும் மோதிய, லத்தீன் அமெரிக்க கண்டத்துக்கான மற்றோர் உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டத்தில் பிரேசிலும் வெனிசுவேலாவும் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டன. உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றில் சிரமப்பட்டு வந்த பிரேசில் இந்த ஆட்டத்தில் ஓரளவு மீண்டு வரும் அறிகுறிகளைக் காண்பித்தது.
முற்பாதியாட்டம் முடிவதற்கு இரண்டு நிமிடங்களுக்கு முன்பு அபாரமான ஃபிரீ கிக் மூலம் பிரேசிலை முன்னுக்கு அனுப்பினார் ரஃபின்யா. பிற்பாதியாட்டம் தொடங்கி ஒரே நிமிடத்தில் வெனிசுவேலா கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தியது.