சற்று தடுமாறும் ஆர்சனலை வீழ்த்தத் துடிக்கும் யுனைடெட்

2 mins read
ce3ed8c4-4a2d-4264-a189-bd7589ef248e
இந்த லீக் பருவத்தில் முன்னதாக மான்செஸ்டர் யுனைடெட்டை வென்றிருந்தது ஆர்சனல். - படம்: நாட்ஜஸ்ட்ஓகே
multi-img1 of 2

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் சென்ற வாரம் மான்செஸ்டர் சிட்டியை நகர விடாமல் செய்து அபார வெற்றிகண்ட மான்செஸ்டர் யுனைடெட், சிறிதளவு சரிவை எதிர்கொண்டுள்ள ஆர்சனலைச் சந்திக்கவுள்ளது.

லீக் பட்டியலில் பல மாதங்களாக முதலிடத்தில் இருந்துவரும் ஆர்சனல் கடந்த இரு லீக் ஆட்டங்களில் கோலின்றி சமநிலை கண்டது.

இப்பருவம் லீக் விருதை வெல்வதற்கான போட்டியில் ஆர்சனல், சிட்டி இரண்டும் இடம்பெற்றுள்ளன. சென்ற வாரம் யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தையும் சேர்த்து தொடர்ந்து நான்கு லீக் ஆட்டங்களில் சிட்டி வெல்லத் தவறிய நிலையில் ஆர்சனல், கடந்த இரு ஆட்டங்களில் வென்றிருந்தால் லீக் விருதை வெல்வதற்கான போட்டியில் எட்ட முடியாத தூரத்துக்குச் சென்றிருக்கலாம்.

ஆனால், இப்போது நிலைமை சற்று மாறுபடுகிறது. சிட்டிக்கு எதிராக மிக அற்புதமாக விளையாடிய யுனைடெட்டை ஒருவகையில் வெல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஆர்சனல்.

சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் யுனைடெட் 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது. அதேவேளை, அந்த ஆட்டத்தில் ‘ஆஃப்சைட்’ காரணமாக யுனைடெட் போட்ட மேலும் மூன்று கோல்கள் மறுக்கப்பட்டன. அதேநேரம், அக்குழுவுக்குக் கிடைத்த இரு கோல் வாய்ப்புகளை கோல் கம்பம் தடுத்தது.

அந்த அளவுக்கு சிட்டிக்கு நெருக்குதல் தந்தது யுனைடெட். சிட்டி, யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டங்களில் பல காலமாக அவ்வளவு தூரம் திணறியதில்லை.

அண்மையில் நிர்வாகி ரூபன் அமோரிமைப் பணிநீக்கம் செய்து இடைக்கால நிர்வாகியாக தங்களின் முன்னாள் வீரர் மைக்கல் கேரிக்கை நியமித்தது யுனைடெட். அவருக்குக் கீழ் குழு பெரிதும் புத்துயிர் பெற்றதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

எனினும், லீக்கில் சற்று தடுமாறியிருந்தாலும் ஆர்சனல் பொதுவாக எல்லாப் போட்டிகளிலும் தொடர்ந்து சிறப்பாகத்தான் விளையாடி வந்துள்ளது. அப்படியிருக்கையில் யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் மீண்டும் அசத்த எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

சிட்டிக்கு எதிராக அபாரமாக வென்ற ஒரே காரணத்துக்காக ஆர்சனலையும் அதேபோல் கையாளலாம் என்று யுனைடெட் நினைத்துவிடக்கூடாது. தோற்றாலும் ஆர்சனல் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்கும் குழுவல்ல.

சிங்கப்பூர் நேரப்படி திங்கட்கிழமை (ஜனவரி 26) அதிகாலை 12.30 மணிக்கு ஆர்சனலும் யுனைடெட்டும் மோதுகின்றன.

லீக் விருதை வெல்லும் போட்டியில் ஈடுபட்டுள்ள மற்றொரு குழுவான ஆஸ்டன் வில்லா, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) நியூகாசல் யுனைடெட்டைச் சந்திக்கிறது. சென்ற வாரம் சிட்டி தோல்வியுற்ற நிலையில் வில்லாவும் எதிர்பாரா வகையில் எவர்ட்டனிடம் தோல்வியடைந்து சற்று பின்தங்கியது. நியூகாசலை வெல்வது எளிதன்று.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இதர லீக் ஆட்டங்களில் செல்சி, கிறிஸ்டல் பேலசைச் சந்திக்கிறது, பிரென்ட்ஃபர்டும் நொட்டிங்கம் ஃபாரஸ்ட்டும் மோதுகின்றன.

குறிப்புச் சொற்கள்