தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அடுத்த அத்தியாயத்திற்குள் நுழையும் யுனைடெட்

2 mins read
04be4b02-e1c4-4250-915f-ff749a0f4b1c
புதிய யுனைடெட் நிர்வாகி ரூபன் அமோரிம். - படம்: ராய்ட்டர்ஸ்

இப்ஸ்விச் (இங்கிலாந்து): சுமார் 11 ஆண்டுகள் முன்பு வரை கொடிகட்டிப் பறந்த இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட், மீண்டும் ஒரு புதிய நிர்வாகியின்கீழ் களமிறங்கவுள்ளது.

யுனைடெட் நிர்வாகியாக 27 ஆண்டுகள் பொறுப்பு வகித்த அலெக்ஸ் ஃபெர்கசன் 2013ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார். அது வரை கிண்ணங்களைக் குவித்து இங்கிலாந்தின் தலைசிறந்த குழுவாக உருவெடுத்த அக்குழு, அதற்குப் பின்னர் ஒருமுறைகூட பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லாததுடன் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்துள்ளது.

யுனைடெட் கடந்த 11 ஆண்டுகளாக சரியாக விளையாடாதது மட்டுமின்றி பலமுறை நிர்வாகியைப் பணிநீக்கம் செய்துள்ளது. அந்த வரிசையில் கடைசியாக எரிக் டென் ஹாக் பணிநீக்கம் செய்யப்பட்டு அப்பொறுப்பு ரூபன் அமோரிமிடம் அளிக்கப்பட்டது.

இப்போது அமோரிம் தலைமையில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 24) களமிறங்கவுள்ளது யுனைடெட். இப்சுவிச் டவுனுக்கு (Ipswich Town) எதிரான அந்த லீக் ஆட்டத்தை முன்னிட்டு யுனைடெட்டை மீண்டும் எழச் செய்யத் தாம்தான் சரியானவர் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அமோரிம்.

மீண்டும் யுனைடெட்டை இங்கிலாந்து காற்பந்தின் உச்சியில் நிறுத்த முடியுமா என்று தன்னிடம் கேட்கப்பட்டதற்கு அமோரிம், “நான் சற்று கனவு காண்பவன். நான் என் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். இக்குழுவின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன். எங்களுக்கு ஒரே மனப்போக்கு உள்ளது.

“எனது விளையாட்டாளர்களை நான் முழுமையாக நம்புகிறேன். புதியனவற்றைச் செய்து பார்க்க விரும்புகிறேன். முடியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா, முடியும் என்று நான் நம்புகிறேன்?” என்று பதிலளித்தார்.

சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு 12.30 மணிக்கு யுனைடெட்டும் இப்சுவிச்சும் சந்திக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மற்றோர் ஆட்டத்தில் லீக் பட்டியலில் முதலிடம் வகிக்கும் லிவர்பூல், சவுத்ஹேம்ப்டனைச் சந்திக்கவுள்ளது. தனது குழு இதுவரை அபாரமாக விளையாடி வந்துள்ளபோதும் மெத்தனமாக இருந்துவிட முடியாது என்று எச்சரித்துள்ளார் லிவர்பூல் நிர்வாகி ஆர்ன ஸ்லொட்.

சென்ற லீக் ஆட்டத்தில் தனது குழு, ஆஸ்டன் வில்லாவை வென்ற பிறகு மகிழ்ச்சியுடன் காணப்பட்ட ஆர்ன ஸ்லொட் (இடது).
சென்ற லீக் ஆட்டத்தில் தனது குழு, ஆஸ்டன் வில்லாவை வென்ற பிறகு மகிழ்ச்சியுடன் காணப்பட்ட ஆர்ன ஸ்லொட் (இடது). - படம்: ஏஎஃப்பி

“நாம் இருக்கும் நிலையை எண்ணி நான் கொண்டாட்ட உணர்வில் இல்லை என்று சொன்னால் விநோதமாக இருக்கும். அதேவேளை, (லீக்கில்) 11 ஆட்டங்கள்தான் முடிந்துள்ளன. இன்னும் பல ஆட்டங்கள் எஞ்சியுள்ளன,” என்று ஸ்லொட் வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 22) கூறினார்.

சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு லிவர்பூல், சவுத்ஹேம்ப்டனுடன் மோதவுள்ளது.

குறிப்புச் சொற்கள்