லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் மான்செஸ்டர் யுனைடெட்க்கும் மான்செஸ்டர் சிட்டிக்கும் இடையில் நடக்கும் ஆட்டங்களுக்கு எப்போதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.
இரு அணிகளும் இறுதிவரை போராடும், அதனால் ஆட்டத்தில் அனல் பறக்கும். ஆனால் இந்தப் பருவத்தில் இரு அணிகளின் நிலைமையும் சற்று பரிதாபமாக உள்ளது.
மான்செஸ்டர் சிட்டி, இங்கிலிஷ் பிரிமியர் லீக், சாம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட தான் விளையாடிய கடைசி 10 காற்பந்து ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் அசைக்க முடியாத அணியாக வலம் வந்த அந்த அணி தற்போது திடீரென சரிவைச் சந்தித்துள்ளது.
நிலைமையை சரி செய்ய முடியாமல் சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியோலாவும் திணறிவருகிறார்.
நடப்பு வெற்றியாளரான சிட்டி, இந்தப் பருவத்தில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் கிண்ணத்தை இழப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
மறுபக்கம் மான்செஸ்டர் யுனைடெட் நிலைமையும் சோகமாக உள்ளது. புதிய நிர்வாகி ரூபன் அமோரிம்முக்கு கீழ் சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் யுனைடெட் அணி தடுமாறிக்கொண்டு தான் வருகிறது.
நொட்டிங்கம் ஃபாரஸ்ட்டுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 3-2 எனும் கோல் கணக்கில் யுனைடெட் தோல்வியடைந்தது.
தொடர்புடைய செய்திகள்
அதனால் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்று புதிய நிர்வாகி ரூபன் அமோரிம் உறுதியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் தோல்விகளில் இருந்து மீண்டுவர சிட்டிக்கு இப்போட்டி மிக முக்கியமான ஒன்று என்று காற்பந்து கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூர் நேரப்படி இந்த ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பின் (டிசம்பர் 16) 12.30 மணிக்கு நடக்கிறது.
மற்ற ஆட்டங்களின் விவரங்கள்
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 3 இங்கிலிஷ் பிரிமியர் லீக் நடக்கின்றன.
சிங்கப்பூர் நேரப்படி இரவு 10 மணிக்கு பிரைட்டன் அணியும் கிறிஸ்டல் பேலஸ் அணியும் மோதுகின்றன.
கடந்த மூன்று ஆட்டங்களில் சரியாக விளையாடாத பிரைட்டன் இந்த ஆட்டத்தில் வெல்லும் முனைப்புடன் விளையாடும் என்று காற்பந்து கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். கிறிஸ்டல் பேலசுக்கு ஆட்டத்தை சமநிலையில் முடித்தாலே வெற்றிதான் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
இப்பருவக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்ற நினைப்பில் உள்ள செல்சி அணி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப்பின் (டிசம்பர் 16, 3 மணி) பிரென்ட்போஃர்ட் குழுவுடன் மோதுகிறது.
அண்மையில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் அணியை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய செல்சி, தொடர் வெற்றியால் உற்சாகத்தில் உள்ளது. இந்த ஆட்டத்திலும் செல்சி கோல் மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் அணி தான் விளையாடிய கடைசி 10 ஆட்டங்களில் இரண்டில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. முன்னணி அணியாக வலம் வந்த ஸ்பர்ஸ் குழுவும் சரியான திட்டங்கள் இல்லாமல் தடுமாறி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப்பின் (டிசம்பர் 16, 3 மணி) டோட்டன்ஹம் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சௌத்ஹேம்டன் அணியுடன் மோதுகிறது.
இந்த ஆட்டத்தில் சௌத்ஹேம்டன் அணியை எளிதாக வீழ்த்தி மீண்டும் வெற்றிப்பாதைக்கு டோட்டன்ஹம் வரும் என்று டோட்டன்ஹம் அணியின் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை மாலை நிலவரப்படி, புள்ளிப்பட்டியலில் 35 புள்ளிகளுடன் லிவர்பூல் குழு முதலிடத்தில் உள்ளது.
செல்சி 31 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. ஆர்சனல் 29 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் மான்செஸ்டர் சிட்டி 27 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளன.
டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் 20 புள்ளிகளுடன் 11 இடத்தில் நீடிக்கிறது. மான்செஸ்டர் யுனைடெட் 19 புள்ளிகளுடன் 13வது இடத்தில் உள்ளது. சௌத்ஹேம்டன் 5 புள்ளிகளுடன் 20வது இடத்தில் தவிக்கிறது.