மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் பரம வைரிகளான மான்செஸ்டர் யுனைடெட்டும் லிவர்பூலும் ஒவ்வொரு முறை மோதும்போதும் அது தனிச்சிறப்புவாய்ந்த ஓர் ஆட்டமாகவே இருந்து வருகிறது என்று யுனைடெட்டின் இடைக்கால நிர்வாகி மைக்கல் கேரிக் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தக் காற்பந்துப் பருவத்தில் இவ்விரு குழுக்களும் லீக் விருதுக்குப் போட்டியிடவில்லை. இருந்தாலும் இரு அணிகளும் சந்திக்கும்போது அந்நிகழ்வில் உள்ள சிறப்பு குறையவில்லை என்பதே கேரிக்கின் கருத்து.
“நிச்சயமாக இது எனக்கு மிகவும் விருப்பமான ஆட்டங்களில் ஒன்றாகும். இது தனிச்சிறப்புவாய்ந்த ஆட்டம் என்பதில் சந்தேகமில்லை,” என்றார் கேரிக்.
“மற்ற குழுக்களிடையேயும் பெரிய ஆட்டங்கள், பரம வைரிகள் இருக்கின்றன. ஆனால், இந்த ஆட்டம் உச்சத்தில் உள்ளது.
“இந்த ஆட்டத்துக்குப் பின்னால் உள்ள வரலாறு, ஆட்டம் தந்த மகிழ்ச்சி, சோகம் மற்றும் இது அளிக்கும் உற்சாகம், விறுவிறுப்பு, உணர்ச்சிகள் ஆகியவை இந்தப் ‘போட்டி’யை தூக்கிக் காட்டுகிறது. அதனால்தான், இது மிகவும் சிறப்புமிக்க ஆட்டமாக விளங்குகிறது,” என்றும் அவர் விவரித்தார்.
யுனைடெட், லிவர்பூல் இரண்டும் இங்கிலாந்து காற்பந்தில் ஆக வெற்றிகரமான குழுக்களாகும். இரண்டும் ஞாயிற்றுக்கிழமை (மே 3) லீக்கில் யுனைடெட்டின் சொந்த மண்ணான ஓல்ட் டிராஃபர்டில் சந்திக்கவிருக்கின்றன. இரு குழுக்களும் அடுத்தப் பருவத்துக்கான யுயேஃபா சாம்பியன்ஸ் லீக் போட்டிக்குத் தகுதிபெறும் விளிம்பில் இருக்கின்றன.
பிரிமியர் லீக்கின் நடப்பு வெற்றியாளரான லிவர்பூல், இந்தப் பருவத்தில் அவ்வளவு சரியாக விளையாடவில்லை. அதேவேளை, கடந்த சில வாரங்களாக அது ஓரளவு மீண்டுவந்து இப்போது சீராக இருப்பதுபோல் தெரிகிறது.
யுனைடெட் இந்தப் பருவத்தின் முற்பாதியில் சீராக விளையாடச் சிரமப்பட்டது. ஆனால், முந்தைய நிர்வாகி ரூபன் அமோரிம் பணிநீக்கம் செய்யப்பட்டு கேரிக் இடைக்கால நிர்வாகியாகப் பொறுப்பேற்றதிலிருந்து அக்குழு சிறப்பாக விளையாடி வந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் பருவம் லீக்கில் லிவர்பூலின் ஏன்ஃபீல்ட் அரங்கில் இவ்விரு குழுக்களும் மோதியபோது யுனைடெட் 2-1 எனும் கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

