மான்செஸ்டர்: யூயேஃபா யுரோப்பா லீக் காற்பந்துப் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் ஆட்டத்தில் ஸ்பெயினின் ரியால் சோசியடாட்டை 4-1 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான மான்செஸ்டர் யுனைடெட்.
இச்சுற்றில் இரு குழுக்களும் இருமுறை மோதின. 5-2 எனும் மொத்த கோல் எண்ணிக்கையில் யுனைடெட் வென்றது.
சிங்கப்பூர் நேரப்படி வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அதிகாலை நடந்த ஆட்டத்தில் யுனைடெட் அணித்தலைவர் புரூனோ ஃபெர்னாண்டஸ் மூன்று கோல்களைப் போட்டார். அக்குழுவின் மற்றொரு கோலைப் போட்டவர் டியோகோ டாலோ.
இந்த ஆட்டத்தில் யுனைடெட்டுக்கு இரண்டு பெனால்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அவை இரண்டையும் ஃபெர்னாண்டஸ் கோலாக்கினார்.
யுனைடெட்டுக்கு மூன்றாவது முறையும் பெனால்டி வழங்கப்பட்டது. ஆனால் காணொளிவழிச் செயல்படும் துணை நடுவரை (VAR) நாடாமல் யுனைடெட் வீரர் பேட்ரிக் டொர்கு கூறியதைக் கேட்டுக்கொண்டு நடுவர் முடிவை மாற்றிக்கொண்டார். தனது குழுவுக்கு பெனால்டி வழங்கப்படக்கூடாது என்ற தனது கருத்தை டொர்கு தொடர்ந்து எடுத்துரைத்தார்.
டொர்கு நாணயமாக நடந்துகொண்டார் என்று யுனைடெட் நிர்வாகி ரூபன் அமோரிம் பெருமைபட்டார்.
“அது சரியான செயல். அவரை எண்ணிப் பெருமைப்படுகிறேன். அதேநேரம், அவ்வேளையில் ஆட்டத்தில் கோலின்றி இருந்திருந்தாலோ நாங்கள் தோற்றுக்கொண்டிருந்தாலோ (என்ன செய்திருப்பார் என்பது எனக்குத் தெரியாது) எனது கருத்தில் மாற்றம் இருந்திருக்காது,” என்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமோரிம் பதிலளித்தார்.

