பெர்மிங்கம்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டாக சரிவை மட்டுமே எதிர்கொண்டு வந்த மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு இப்போது நம்பிக்கை தரும் வகையில் நிலைமை உள்ளது.
சனிக்கிழமை (டிசம்பர் 20) மாலை நிலவரப்படி லீக் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கும் யுனைடெட் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) வெற்றிபெற்றால் லீக் கிண்ணத்தை வெல்வதற்கான போட்டியில் களமிறங்கக்கூடும். ஆனால், அதன் வழியில் நிற்கும் ஆஸ்டன் வில்லாவும் அப்போட்டியில் இடம்பெறுவது யுனைடெட்டுக்கு சவாலாக இருக்கும்.
சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு 12.30 மணிக்கு வில்லாவும் யுனைடெட்டும் மோதுகின்றன. வில்லாவின் சொந்த மண்ணான வில்லா பார்க் விளையாட்டரங்கில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.
லீக் பட்டியலில் மூன்றாது இடத்தில் உள்ள வில்லா, இப்பருவத்தைப் படுமோசமாகத் தொடங்கியிருந்தாலும் படிப்படியாக முன்னேறி வந்து இப்போது வலுவாக இருக்கிறது. சில ஆட்டங்களில் தோல்வியடைந்தாலும் நன்கு மீண்டு வந்து வெற்றிபெற்றிருக்கிறது.
யுனைடெட்டை வென்று லீக் கிண்ணத்தை வெல்லும் போட்டியில் தாங்கள் இடம்பெறுவதை ‘உறுதிசெய்வதே’ வில்லாவின் ஒரே இலக்காக இருக்கும்.
சென்ற பருவம் கோல்களைப் போட சிரமப்பட்ட யுனைடெட் இம்முறை கோல்களை அடித்துத் தள்ளி வருகிறது. அதேவேளை, அதன் தற்காப்பு ஆட்டம் மேம்படலாம்.
கடந்த இரு லீக் ஆட்டங்களில் மொத்தம் எட்டு கோல்களைப் போட்டது யுனைடெட். கடந்த வாரம் யுனைடெட்டும் போர்ன்மத்தும் மோதிய விறுவிறுப்பான ஆட்டம் 4-4 என சமநிலையில் முடிந்தது.
இப்பருவம் யுனைடெட்டுக்கு ஆக முக்கியமான விளையாட்டாளர்களில் சிலராக இருந்துவரும் பிரையன் ம்போமோ, அமாட் டியாலோ இருவரும் ஆப்பிரிக்க தேசக் கிண்ணப் போட்டியில் விளையாடச் சென்றுள்ளனர். அப்போட்டியில் தங்களின் தேசிய அணிகளுக்கு விளையாடவிருப்பதால் இருவரும் சில வாரங்களுக்கு யுனைடெட்டுக்கு ஆடமாட்டார்கள்.
தொடர்புடைய செய்திகள்
இருவரின் இழப்பும் யுனைடெட்டுக்குப் பேரிழப்பாக இருக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. அதேவேளை, ம்போமோ இல்லாதது இதுவரை சிரமப்பட்டு வந்துள்ள தாக்குதல் ஆட்டக்காரர் பென்யமின் செஷ்கோ ஒருவழியாக முத்திரை பதிக்க நல்ல வாய்ப்பாக இருக்கலாம்.
யுனைடெட்டின் மற்றொரு வீரரான நூசாய்ர் மஸ்ராவியும் அந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ளார். ஆனால், அவர் அதிகமாக விளையாடாமல் இருப்பதால் யுனைடெட்டுக்கு அதிக பாதிப்பில்லாமல் இருக்கலாம்.
இந்த ஆட்டத்தில் யுனைடெட் வென்றால் அது குழுவில் பெரிய அளவில் நம்பிக்கையை வளர்க்கக்கூடும். தோல்வியுற்றால் மறுபடியும் பழைய அச்சங்களும் ஐயங்களும் தலைதூக்கக்கூடும்.
வில்லாவை வெல்வது சாதாரணமன்று.

