கலிஃபோர்னியா: உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்கா அதன் முதல் ஆட்டத்தில் கோல் மழை பொழிந்து 4-1 எனும் கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி சனிக்கிழமை (ஜூன் 13) காலை 10 மணிக்குத் தொடங்கியது.
இதில் அமெரிக்காவைத் தென்னமெரிக்க நாடான பராகுவாய் எதிர்த்துக் களமிறங்கியது.
அமெரிக்கக் கொடியின் சிவப்பு, நீலம், வெள்ளை ஆகிய நிறங்களைக் கொண்ட ஆடைகள் அணிந்த பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களின் ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டம் விளையாட்டரங்கில் திருவிழா உணர்வை ஏற்படுத்தியது.
ஆட்டத்தை நேரில் கண்டு களிக்கவும் அமெரிக்கக் குழுவுக்கு ஆதரவு வழங்கவும் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் போன்ற பிரபலங்களும் விளையாட்டரங்கில் ஆவலுடன் காத்திருந்தனர். இங்கிலாந்துக் காற்பந்துக் குழுவின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் டேவிட் பெக்கமும் அவர்களில் ஒருவர். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோவும் ஆட்டத்தை நேரில் கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சொந்த மண்ணில் விளையாடும் முனைப்புடன் களமிறங்கிய அமெரிக்கா, ஆட்டம் தொடங்கியதிலிருந்து ஆதிக்கம் செலுத்தியது.
ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பராகுவாய் தற்காப்பு தடுமாறியது. தாக்குதலை முறியடிக்க விரைந்த பராகுவாய் மத்தியத்திடல் ஆட்டக்காரர் டேமியன் போபாடில்லா, தவறுதலாகப் பந்தைத் தமது சொந்த வலைக்குள் அனுப்பினார்.
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்னிலை வகித்த உத்வேகத்தில் கோல் வேட்டையில் இறங்கியது அமெரிக்கா.
தொடர்புடைய செய்திகள்
அது மேற்கொண்ட இடைவிடா முயற்சிக்குக் கைமேல் பலன் கிடைத்தது.
அமெரிக்காவின் தொடர் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாமல் பராகுவாய் திக்குமுக்காடியது.
இந்நிலையில், ஆட்டத்தின் 28வது நிமிடத்தில், அமெரிக்கத் தாக்குதல் ஆட்டக்காரர் ஃபொலரின் பெலகன் அனுப்பிய பந்து வலையைத் தொட்டது. ஆனால் ஆஃப்சைட் காரணமாக அது நிராகரிக்கப்பட்டது.
இருப்பினும், 24 வயது பெலகன் விடுவதாக இல்லை. மூன்று நிமிடங்கள் கழித்து, அவர் அமெரிக்காவின் இரண்டாவது கோலைப் போட்டார்.
இடைவேளைக்குச் சில வினாடிகளே இருந்தபோது, பெலகன் மீண்டும் தடம் பதித்தார். பராகுவாயின் இரண்டு தற்காப்பு ஆட்டக்காரர்களிடமிருந்து திறம்பட நழுவிய பலகுன், பந்தை வலைக்குள் சேர்த்தார்.
இடைவேளையின்போது 3-0 எனும் கோல் கணக்கில் அமெரிக்கா முன்னிலை வகித்தது.
பிற்பாதி ஆட்டத்தில், 73வது நிமிடத்தில் பராகுவாயின் மௌரிசியோ கோல் போட்டார். ஆனால் அது அவரது குழுவின் ஆறுதல் கோலாகவே அமைந்தது. அதற்கு மேல் பராகுவாய் அணியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இதற்கு அமெரிக்காவின் மின்னல் வேக ஆட்டமும் எப்படியும் வென்றுவிட வேண்டும் என்ற வேட்கையும் காரணங்களாக இருந்தன என்றால் அது மிகையன்று.
ஆட்டம் நிறைவுபெற இருந்த நிலையில், அமெரிக்காவின் ஜியோவானி ரெய்னா அமெரிக்காவின் நான்காவது கோல் போட்டதைத் தொடர்ந்து, விளையாட்டரங்கில் கூடியிருந்த ரசிகர்கள் கொண்டாட்ட மழையில் நனைந்தனர்.
“அமெரிக்காவின் முதல் இரண்டு கோல்கள் புகுந்ததும் பராகுவாய் நிலைகுலைந்துவிட்டது. அதன் பிறகு அக்குழுவால் அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை. சொந்த மண்ணில், சக நாட்டவர்கள் முன் விளையாடியதும் அமெரிக்காவுக்குச் சாதகமாக அமைந்தது. அமெரிக்க ஆட்டக்காரர்கள் முனைப்புடன் விளையாடி வெற்றியைப் பதிவு செய்துவிட்டனர்,” என்றார் ஆட்டத்தைக் கண்டு களித்த 44 வயது என். கண்ணன்.
“பராகுவாய் முதல் சுற்றுலேயே வெளியேறிவிடும் என்று நம்புகிறேன். அமெரிக்காவைச் எவ்வாறு சமாளிப்பது என்று தெரியாமல் அக்குழு திண்டாடியது. இந்த ‘டி’ பிரிவில் ஆஸ்திரேலியா, துருக்கி என மேலும் இரண்டு வலுவான குழுக்கள் உள்ளன. அமெரிக்காவின் ஆண்டனி ராபின்சன் அற்புதமாக விளையாடினார். அமெரிக்க ஆட்டக்காரர் டிம் ரீம்முக்கு கொடுக்கப்பட்ட மஞ்சள் அட்டை, நடுவர் உதவிக் காணொளித் (விஏஆர்) தொழில்நுட்பத்தின் உதவியோடு மீட்டுக்கொள்ளப்பட்டதைப் பார்த்து வியந்தேன். இந்த அணுகுமுறையை இப்போதுதான் முதன்முறையாகப் பார்க்கிறேன்,” என்று விமானப் பொறியாளரான 40 வயது சிவபிரகாஷ் மனோகரன் தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டார்.
மற்றோர் ஆட்டத்தில் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தும் மற்றொரு நாடான கனடா போஸ்னியாவுடன் மோதியது. இரு குழுக்களும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன. போஸ்னியா கோல் போட்டு முன்னிலை வகித்தது. ஆனால், கனடாவுக்காக மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய கைல் லாரின் கோல் போட்டு ஆட்டத்தைச் சமப்படுத்தினார்.

