புதுடெல்லி: டி20 உலகக் கிண்ணப் போட்டியில் அமெரிக்க அணி சரியான முறையில் ஆடி ஆற்றலை வெளிப்படுத்தினால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்று அணியின் துணைத் தலைவர் ஆரோன் ஜோன்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் போட்டியை ஏற்று நடத்தும் அமெரிக்கா, சூப்பர் 8 சுற்றில் இடத்தை உறுதிசெய்துள்ளது. ‘ஏ’ பிரிவில் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம் ‘வாஷ் அவுட்’ ஆனதைத் தொடர்ந்து அமெரிக்க அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
‘ஏ’ பிரிவின் தொடக்க ஆட்டத்தில் கனடாவை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த அமெரிக்கா, முன்னாள் வெற்றியாளர் பாகிஸ்தானையும் சூப்பர் ஓவரில் வென்று அசத்தியது.
இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ஆரோன் ஜோன்ஸ், “சூப்பர் 8 சுற்றில் அடுத்த சவாலை நாங்கள் எதிர்நோக்குகிறோம். தலைசிறந்த அணிகளுடன் போட்டியிட்டு அவற்றைத் தோற்கடிக்க முடியும் என்பதை நாங்கள் காட்டியுள்ளோம்,” என்று சொன்னார்.
சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட அணிகளுடன் அமெரிக்கா பொருதும். உலகின் சிறந்த அணிகளுக்குச் சரியான போட்டி கொடுக்க முடியும் என ஜோன்ஸ் நம்புகிறார்.
“உண்மையைச் சொன்னால், பலரும் அமெரிக்க கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதில்லை. எங்களிடம் எவ்வளவு திறன் உள்ளது என்பதை உலகம் இன்னும் அறியவில்லை. அதை நான் எங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொள்கிறேன். ஒருநாள், நாங்கள் சரியான முறையில் கிரிக்கெட் விளையாடி, உலகின் எந்த அணியையும் தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்றார் ஜோன்ஸ்.
சூப்பர் 8 சுற்றுக்கு அமெரிக்க அணி தகுதிபெற்றுள்ளதால், 2026 டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிக்கும் அவ்வணி தகுதிபெற்றுள்ளது.