டெக்சஸ்: பங்ளாதேஷ் அணிக்கு எதிரான இருதரப்பு டி20 தொடரை வென்று, கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது அமெரிக்க அணி.
வரும் ஜூன் 1 முதல் 20ஆம் தேதிவரை அமெரிக்காவிலும் வெஸ்ட் இண்டீசிலும் உலகக் கிண்ண டி20 போட்டிகள் நடக்கவுள்ளன.
இந்நிலையில், பங்ளாதேஷ் அணி அமெரிக்கா சென்று, அந்நாட்டு அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது.
டெக்சஸ் மாநிலத்தின் பிரெய்ரி வியூ நகர விளையாட்டரங்கில் அப்போட்டிகள் நடந்து வருகின்றன.
இம்மாதம் 21ஆம் தேதி நடந்த முதல் போட்டியில் அமெரிக்க அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதனையடுத்து, வியாழக்கிழமை (மே 23) நடந்த இரண்டாவது போட்டியில் பங்ளாதேஷ் எழுச்சி காணும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறையும் அமெரிக்காவின் கையே ஓங்கியிருந்தது.
முதலில் பந்தடித்த அமெரிக்கா 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக அணித்தலைவர் மோனங்க் பட்டேல் 42 ஓட்டங்களைக் குவித்தார்.
இரண்டாவதாகப் பந்தடித்த பங்ளாதேஷ் 19.3 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து, 138 ஓட்டங்களை மட்டும் எடுத்துத் தோற்றுப்போனது.
தொடர்புடைய செய்திகள்
இதனையடுத்து, 2-0 என அமெரிக்க அணி தொடரைக் கைப்பற்றியது.
இத்தோல்வி குறித்துக் கருத்துரைத்த பங்ளாதேஷ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஷாகிப் அல் ஹசன், “பெருத்த ஏமாற்றமளிக்கிறது. இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இரண்டு ஆட்டங்களில் தோற்போம் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எங்கள் அணியினர் விழித்தெழ வேண்டிய நேரமிது,” என்றார்.
மூன்றாவது, கடைசிப் போட்டி சனிக்கிழமை (மே 25) நடைபெறவுள்ளது.

