பிலடெல்ஃபியா: விரிவாக்கம் செய்யப்பட்ட 48 அணிகள் கொண்ட உலகக் கிண்ணப் போட்டியை மேம்படுத்தியதா என்பது விவாதத்திற்குரியது என்றும் தகுதிச் சுற்றின் விறுவிறுப்பைக் குறைப்பதன் மூலம் இந்த மாபெரும் காற்பந்துப் போட்டியின் மதிப்பைக் குறைத்துவிடக்கூடும் என்றும் கானா பயிற்றுவிப்பாளர் கார்லோஸ் குய்ரோஸ், ஜூன் 27ஆம் தேதியன்று கூறினார்.
பல இடங்கள் போட்டிக்கு இருந்ததால், அணிகள் தகுதி பெறுவது எளிதாக இருந்தது. மேலும் போட்டிக்குத் தகுதி பெறத் தவறிய நாடுகளைப் பற்றியே தலைப்புச் செய்திகள் பெரும்பாலும் கவனம் செலுத்தின என்றும் அவர் மேலும் கூறினார்.
உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் 10 ஆப்பிரிக்க அணிகளில் ஒன்றான கானா, குரோவேஷியாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து ‘எல்’ பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்தபோதிலும், சனிக்கிழமை (ஜூன் 27) அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
“உலகக் கிண்ணத்துக்கு இத்தனை அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், உலகக் கிண்ணத்தில் பங்கேற்பது ஓர் அரிய நிகழ்வு என்ற வகையில் இந்தப் போட்டியின் மதிப்பு, என் கருத்துப்படி, இன்னும் விவாதத்திற்குரியதாகவே உள்ளது,” என்று ஆப்பிரிக்க அணிகளுக்கான இடங்களின் எண்ணிக்கை நியாயமானதா என்று கேட்கப்பட்டபோது, ஒரு செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
“ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் நடக்கும் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் கூட, எல்லாக் அணிகளும் தகுதி பெற்றுவிடுவதால், அவற்றின் முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்குகின்றன.”
“தகுதிச் செயல்முறை தீவிரமானதாகவும், கடினமானதாகவும், போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் உலகக் கிண்ணம் கட்டமைக்கப்பட வேண்டும். மேலும், வீரர்கள் நீண்ட காற்பந்துப் பருவங்களைக் கடந்து வந்துள்ளனர் என்பதையும் ஏற்பாட்டாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்,” என்று பயிற்றுவிப்பாளராகத் தனது ஐந்தாவது உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் கெய்ரோஸ் மேலும் கூறினார்.
தனது அணியின் தோல்வி குறித்துப் பேசிய போர்ச்சுகீசியப் பயிற்றுவிப்பாளர், குரோவேஷியாவுக்கு எதிராகத் தற்காப்பு ஆட்டத்தில் பெரிய தவறுகளைச் செய்ததாகவும், ஜூலை 3ஆம் தேதி கேன்சஸ் சிட்டியில் கொலம்பியாவுக்கு எதிராக நடைபெறவிருக்கும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிக்கு முன்னதாக அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வோம் என்றும் கூறினார்.

