விட்டுக்கொடுப்பதாக இல்லை வில்லா

1 mins read
fc50187a-0963-42ea-936b-174e973204ce
யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் வில்லாவின் இரண்டாவது கோலையும் போட்ட பிறகு கொண்டாடும் மோர்கன் ராஜர்ஸ் (வலது). - படம்: ராய்ட்டர்ஸ்

பர்மிங்கம்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் மனந்தளராது விளையாடிய மான்செஸ்டர் யுனடெட்டை வென்றது ஆஸ்டன் வில்லா.

இந்த பிரிமியர் லீக் பருவம் பாதிக் கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தபடி அசத்துகிறது வில்லா.

முதலிடத்தில் உள்ள ஆர்சனலுக்கும் வில்லாவுக்கும் இடையே வித்தியாசம் மூன்று புள்ளிகள்தான். இரண்டாம் இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் வில்லாவுக்கு முன்னால் இருக்கிறது.

வில்லாவின் சொந்த மண்ணான வில்லா பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அக்குழுவின் இரண்டு கோல்களையும் மோர்கன் ராஜர்ஸ் போட்டார். லீக்கின் புதிய நட்சத்திரங்களில் ஒருவராக உருவெடுத்துவரும் இங்கிலாந்து வீரர் ராஜர்ஸ் போட்ட இரண்டு கோல்களும் அபாரமாக இருந்தன.

முற்பாதியாட்டம் முடியும் தருவாயில் ராஜர்ஸ், வில்லாவை முன்னுக்கு அனுப்பினார். அதற்கு சுமார் மூன்று நிமிடங்களுக்குள் முற்பாதியாட்டம் முடிவதற்கு முன்னரே யுனைடெட்டின் மத்தேயுஸ் குன்யா, கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் ராஜர்ஸ், வில்லாவின் வெற்றி கோலைப் போட்டார். அவரின் இரண்டு கோல்களும் கிட்டத்தட்ட ஒரே வடிவில் அமைந்தன.

இந்த ஆட்டத்துக்கு முன்பு நன்கு மேம்பட்டுவந்த யுனைடெட்டுக்கு இந்தத் தோல்வி ஒரு பின்னடைவாக அமைந்தது. எனினும், அடுத்த ஆட்டத்திலிருந்து மறுபடியும் வெல்லத் தொடங்கினால் நிலைமை சீராகலாம். இல்லாவிடில் அக்குழுவுக்குப் பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கக்கூடும்.

குறிப்புச் சொற்கள்