வினிசியஸ் வேகம், விவேகம்; பிரேசிலுக்கு முதல் வெற்றி

வினிசியஸ் வேகம், விவேகம்; பிரேசிலுக்கு முதல் வெற்றி

2 mins read
1f8f794c-7b73-4418-bed2-def9bfde0f5d
பராகுவேக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசிலின் முதல் கோலை அடிக்கிறார் வினிசியஸ் ஜூனியர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

நெவாடா: அமெரிக்கக் கிண்ணக் (கோப்பா அமெரிக்கா) காற்பந்துத் தொடரில் தனது முதல் ஆட்டத்தில் மிளிரத் தவறிய பிரேசில் அணி, இரண்டாவது ஆட்டத்தில் எழுச்சி கண்டது.

பராகுவேக்கு எதிராக வெள்ளிக்கிழமை (ஜூன் 28) நடந்த அந்த ஆட்டத்தில் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றியைச் சுவைத்தது.

அவ்வணியின் நட்சத்திர ஆட்டக்காரரான வினிசியஸ் ஜூனியர் இரு கோல்களையும், சாவியோ, லூக்கஸ் பக்கெத்தா இருவரும் ஆளுக்கு ஒரு கோலையும் அடித்தனர்.

கடைசியாக விளையாடிய ஆறு ஆட்டங்களில் பிரேசிலுக்குக் கிடைத்த முதல் வெற்றி இதுதான்.

அதுபோல், புதிய பயிற்றுநராகக் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொரிவால் ஜூனியரின்கீழ் அவ்வணி வென்ற முதல் ஆட்டமும் இதுதான்.

ஆட்டம் தொடங்கியதிலிருந்தே வினிசியசின் வேகமும் விவேகமும் பராகுவேக்கு அச்சுறுத்தலாக விளங்கியது.

பிரேசிலுக்கு 28வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தபோதும், பந்தை வெளியே உதைத்து அதனை வீணாக்கினார் பக்கெத்தா. ஆயினும், அடுத்த ஏழாவது நிமிடத்தில் அவர் ஏற்படுத்தித் தந்த வாய்ப்பின்மூலம் பிரேசிலின் முதல் கோலைப் போட்டார் வினிசியஸ்.

ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் கோலடித்த பிரேசிலின் முன்னிலையை இரட்டிப்பாக்கினார் சாவியோ. முற்பாதியின் இறுதித் தறுவாயில் வினிசியஸ் மேலும் ஒரு கோலடிக்க, மூன்று கோல் முன்னிலையுடன் இடைவேளைக்குச் சென்றது பிரேசில்.

பிற்பாதி ஆட்டத்தின் மூன்றாம் நிமிடத்திலேயே, தொலைவிலிருந்து கோலடித்து அசத்தினார் பராகுவேயின் அல்டரேத்தே. 65வது நிமிடத்தில் கிட்டிய பெனால்டி வாய்ப்பை இம்முறை தவறவிடாத பக்கெத்தா, மூன்று கோல் என்ற முன்னிலையை மீட்டார்.

ஆட்டத்திற்குப் பின் வினிசியசை வெகுவாகப் பாராட்டினார் பிரேசில் பயிற்றுநர் டொரிவால். “ஆட்டத்தில் வினிசியசின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. கிட்டத்தட்ட முழுநிறைவுதரும் வகையில் அவரது செயல்பாடு அமைந்திருந்தது. நல்ல சூழல்களையும் கோல் வாய்ப்புகளையும் அவர் உருவாக்கினார்,” என்று டொரிவால் புகழ்ந்தார்.

முன்னதாக, கோஸ்டா ரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் 0-0 எனச் சமநிலை கண்டிருந்தது.

மொத்தம் 16 அணிகள், பிரிவிற்கு நான்கு என, நான்கு பிரிவுகளாக மோதும் அமெரிக்கக் கிண்ணத் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. அதில் ‘டி’ பிரிவிலிருந்து கொலம்பியா இரு வெற்றிகளுடன் ஆறு புள்ளிகளைப் பெற்று, காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. பிரேசிலும் நான்கு புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறது.

அடுத்ததாக, சிங்கப்பூர் நேரப்படி புதன்கிழமை (ஜூலை 3) காலை 9 மணிக்கு நடக்கவுள்ள ஆட்டத்தில் பிரேசில், கொலம்பியாவுடன் பொருதவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்