தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வினிசியஸ் ‘ஹாட்ரிக்’; ரியால் பேரெழுச்சி

1 mins read
12b6643a-dd17-49d0-9624-c782899e3a46
மூன்று கோல்களை அடித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்ததை இப்படி வெளிப்படுத்துகிறார் ரியால் மட்ரிட் காற்பந்துக் குழுவின் பிரேசில் ஆட்டக்காரர் வினிசியஸ் ஜூனியர். - படம்: ஏஎஃப்பி

மட்ரிட்: எதிரணியை முதலில் இரு கோல்கள் போடவிட்டு பின்னடைவைச் சந்தித்தபோதும் நட்சத்திர ஆட்டக்காரர் வினிசியஸ் ஜூனியர் ‘ஹாட்ரிக்’ கோலடித்து ரியால் மட்ரிட் காற்பந்துக் குழுவை மீட்டார்.

இதனையடுத்து, ஜெர்மனியின் பொருஸியா டோர்ட்மண்ட் குழுவிற்கு எதிராக புதன்கிழமை (அக்டோபர் 23) அதிகாலை நடந்த சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் ரியால் குழு 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றியைச் சுவைத்தது.

அக்குழு சார்பில் விழுந்த மற்ற இரு கோல்களுக்குச் சொந்தக்காரர்கள் அன்டோனியா ருடிகர் மற்றும் லூக்கஸ் வாஸ்கெஸ்.

கடந்த பருவத்தின் இறுதிப் போட்டியிலும் இவ்விரு குழுக்களே மோதியது குறிப்பிடத்தக்கது. அதிலும் ரியால் குழு 2-0 என்ற கோல் கணக்கில் வாகை சூடியிருந்தது.

இதற்கிடையே, இன்னோர் ஆட்டத்தில் எதிரணி ஆட்டக்காரர் போட்ட சொந்த கோலால் ஆர்சனல் குழு 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

கடந்த வார இறுதியில் நடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் தோற்றுப்போனதால் ஷக்தர் டோனட்ஸ்க் குழுவிற்கு எதிரான ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் இருந்தது ஆர்சனல்.

இந்த ஆட்டத்திலும் அதன் செயல்பாடு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. பல கோல் வாய்ப்புகளைக் கோட்டைவிட்டதோடு, இரண்டாம் பாதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் அது கோலாக்கத் தவறியது.

ஆயினும், ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில் கேப்ரியல் மார்ட்டினெல்லி உதைத்த பந்து கோல் கம்பத்தின்மீது பட்டு, பின்னர் ஷக்தர் குழுவின் கோல்காப்பாளர் டிமிட்ரோ ரிஸ்னிக்கின் முதுகில் பட்டு வலைக்குள் நுழைந்து கோலானது ஆர்சனலுக்கு மூன்று புள்ளிகளைப் பெற்றுத் தந்தது.

குறிப்புச் சொற்கள்