பெங்களூரு: இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராத் கோஹ்லி, 36, அனைத்துலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக திங்கட்கிழமை (மே 12) அறிவித்தார்.
2011ல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தொடங்கிய கோஹ்லி, 123 டெஸ்ட் போட்டிகளில் 30 சதங்களையும் 9,230 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.
இவ்வாண்டு இந்திய அணி அதன் மூன்றாவது சாம்பியன்ஸ் கிண்ணத்தை வெல்ல உதவிய கோஹ்லி, அனைத்துலக ஒருநாள் போட்டிகளில் அநேகமாக தொடர்ந்து ஆடுவார்.
கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீசில் இரண்டாவது முறையாக இந்திய அணி டி20 உலகக் கிண்ணத்தை வென்றதைத் தொடர்ந்து, டி20 போட்டிகளிலிருந்து விலகுவதாக கோஹ்லி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்திய பிரிமியர் லீக்கில் (ஐபிஎல்) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக கோஹ்லி தொடர்ந்து விளையாடவுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளிலிருந்து கோஹ்லி விலகவுள்ளதாக கடந்த வாரயிறுதியில் உள்ளூர் ஊடகத் தகவல் பரவத் தொடங்கிய நிலையில், திங்கட்கிழமை அதிகாலை தமது சமூக ஊடகப் பக்கத்தில் கோஹ்லி இதனை உறுதிப்படுத்தினார்.