பிரிட்ஜ்டவுன்: டி20 உலகக் கிண்ணம் கைசேர்ந்த மகிழ்ச்சியுடன் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் ரோகித் சர்மா, நட்சத்திர ஆட்டக்காரர்கள் விராத் கோஹ்லி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அனைத்துலக டி20 போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தனர்.
அமெரிக்காவிலும் வெஸ்ட் இண்டீசிலும் நடந்த டி20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஏழு ஓட்டங்களில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி, வாகை சூடியது.
அப்போட்டியில் 76 ஓட்டங்கள் குவித்து ஆட்ட நாயகனாகத் தேர்வுபெற்ற 35 வயது கோஹ்லி, “இதுதான் எனது கடைசி டி20 உலகக் கிண்ணம். இதனையே நாங்கள் அடைய விரும்பினோம்.
“ஒருநாள், ஓட்டம் எடுக்க முடியாது என்ற எண்ணம் தோன்றும்போது சில விஷயங்கள் நடக்கலாம். கடவுள் மிகப் பெரியவர். சரியான நாளில் அணிக்கான வேலையைச் செய்து முடித்துள்ளேன். இதுதான் இந்தியா சார்பில் நான் ஆடிய கடைசி டி20 ஆட்டம்,” என்று கோஹ்லி சொன்னார்.
“அடுத்த தலைமுறை வீரர்கள் அணியைத் தோளில் சுமக்க வேண்டிய நேரமிது. அணியில் அற்புதமான வீரர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் அணியை முன்னெடுத்துச் சென்று, இந்தியக் கொடியை உயரப் பறக்கவிடுவர்,” என்றும் அவர் கூறினார்.
கோஹ்லி 125 அனைத்துலக டி20 போட்டிகளில் விளையாடி, 38 அரைசதம், ஒரு சதம் உட்பட 4,188 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து, ரோகித்தும் தமது ஓய்வை அறிவித்தார்.
“அனைத்துலக டி20 போட்டிகளிலிருந்து விடைபெற இதைவிடச் சிறந்த நேரம் இருக்க முடியாது. இந்திய அணிக்காக டி20 போட்டியில்தான் முதலில் விளையாடினேன். டி20 உலகக் கிண்ணத்தை வெல்ல விரும்பினேன். இது உணர்ச்சிகரமான தருணம். வார்த்தைகளில் வெளிப்படுத்துவது கடினம்,” என்றார் 37 வயதான ரோகித்.
தொடர்புடைய செய்திகள்
இவர் 159 அனைத்துலகப் போட்டிகளில் ஐந்து சதம், 32 அரைசதம் உட்பட 4,231 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
ஆல்ரவுண்டரான 35 வயது ஜடேஜா இந்திய அணிக்காக 74 டி20 போட்டிகளில் விளையாடி 515 ஓட்டங்களை எடுத்துள்ளதுடன் 54 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.