புதுடெல்லி: இந்தியா சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் ஐந்து போட்டிகள் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னணிப் பந்தடிப்பாளரான விராத் கோஹ்லி, தனிப்பட்ட காரணங்களுக்காக முதலிரு போட்டிகளிலிருந்து விலகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, இந்திய அணித் தேர்வுக் குழு மாற்று வீரரை அறிவிக்கும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அண்மையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை (ஜனவரி 25) ஹைதராபாத்தில் தொடங்க இருக்கிறது.