வாஷிங்டன் சுந்தர் காயம்; மாற்றுத் திட்டம் குறித்து இந்திய அணி ஆலோசனை

2 mins read
49548b84-a6fa-44e7-97c4-b1824569847b
இந்திய கிரிக்கெட் அணி ஆல்ரவுண்டரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான வாஷிங்டன் சுந்தர். - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு ஏற்பட்ட காயம் எதிர்பார்த்ததைவிட மோசமாக இருப்பதால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து அவர் விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிராக ஜனவரி 11ஆம் தேதி நடந்த ஒருநாள் போட்டியின்போது வாஷிங்டன் காயமடைந்தார்.

இந்நிலையில், வரும் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கவிருக்கும் டி20 உலகக் கிண்ணத் தொடருக்குமுன் அவர் முழுமையாகக் குணமடைந்துவிடுவாரா என்பதில் ஐயம் நிலவுகிறது.

இதையடுத்து, அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மாற்று வீரரைத் தயார்நிலையில் வைத்திருக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டு வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையைச் சேர்ந்தவரான வாஷிங்டனின் உடல்நிலை குறித்து இன்னும் ஒரு வாரத்திற்குப்பின் முறையாக மதிப்பீடு செய்யலாம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இவ்வார இறுதியில் பிசிசிஐயின் உன்னத நிலையத்திற்கு வாஷிங்டன் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. விலாப் பகுதியில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் நினைத்ததைவிட மோசமாக இருக்கலாம் என்று பிசிசிஐ மருத்துவக் குழு கருதுகிறது. இதனால், அவரது விலாப் பகுதி முழுமையாகப் பரிசோதிக்கப்படவுள்ளது.

டி20 உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் அடங்கிய இந்திய அணியில் இடம்பெற்றுள்ள திலக் வர்மா குறித்தும் அணி நிர்வாகம் கவலை அடைந்துள்ளது. கடந்த வாரம் அவருக்கு அடிவயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து, நியூசிலாந்து அணிக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை இந்த இருவராலும் அல்லது இருவரில் ஒருவர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாட முடியாமல் போனால், ரியான் பராக், ஷாபாஸ் அகமது, நிதிஷ் ரெட்டி, ஆயுஷ் பதோனி ஆகியோரில் எவருக்கேனும் வாய்ப்பு கிடைக்கலாம். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாஷிங்டனுக்குப் பதிலாக ஆயுஷ் பதோனி சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்