கவனத்தைத் திசைதிருப்பாதீர்: பாகிஸ்தான் அணி இயக்குநரைச் சாடும் வாசிம் அக்ரம்

கவனத்தைத் திசைதிருப்பாதீர்: பாகிஸ்தான் அணி இயக்குநரைச் சாடும் வாசிம் அக்ரம்

2 mins read
5f7abafa-0bea-4192-86e6-985619c04a9f
பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வாசிம் அக்ரம் (இடது), அவ்வணியின் இப்போதைய இயக்குநர் மிக்கி ஆர்தர். - படங்கள்: ஏஎன்ஐ, எக்ஸ்
Google News Preferred Icon

அகமதாபாத்: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியிடம் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்ததால் அவ்வணியினரை முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

போட்டி நடந்த அகமதாபாத் அரங்கம் முழுக்க இந்திய ரசிகர்களால் நிரம்பியிருந்தது.

இதனால் கடுப்பான பாகிஸ்தான் அணியின் இயக்குநர் மிக்கி ஆர்தர், “இது அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) நடத்தும் போட்டியா? இல்லை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நடத்தும் போட்டியா?” என்று கேட்டிருந்தார்.

அரங்கிலுள்ள 130,000 ரசிகர்களும் ஓர் அணிக்கு எதிராக இருந்தால் அது தாக்கத்தை ஏற்படுத்துமா இல்லையா என்றும் அவர் கேட்டிருந்தார்.

இந்நிலையில், ஆர்தர் இவ்வாறு கூறியதற்கு பாகிஸ்தான் முன்னாள் தலைவர் வாசிம் அக்ரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ஆர்தர் எந்த அர்த்தத்தில் இவ்வாறு பேசுகிறார் என்று தெரியவில்லை. இந்தியப் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள அவர் என்ன திட்டம் வைத்திருந்தார்? அதைச் சொல்ல வேண்டும். நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புவது அதைத்தான். கண்டதையும் பேசக்கூடாது. இப்படி ஏதாவது ஒரு காரணம் சொல்லி, கடந்து போய்விடலாம் என்று அவர் நினைக்கிறார். அது முடியாது,” என்று அக்ரம் சொன்னார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் மொயின் கானின் கருத்தும் இதையே எதிரொலித்தது.

“கவனத்தைத் திசைதிருப்புகிறார் ஆர்தர். ஏற்கெனவே பலரும் மனமுடைந்து போயுள்ளனர். அவர்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் வகையில் ஆர்தர் பேசுகிறார். அவரது வேலை என்னவோ அதைப் பற்றிப் பேசவேண்டும். அதைவிடுத்துப் புதுவழியைக் காட்டுகிறார். அவ்வாறு அவர் பேசியிருக்கக்கூடாது,” என்று மொயின் கான் கூறினார்.

அத்துடன், “பிசிசிஐயை நாம் பாராட்ட வேண்டும். பாகிஸ்தானில் அப்படியொரு போட்டி நடந்தால் இங்கும் அப்படித்தான் நடக்கும். கிடைக்கும் வாய்ப்பை நாமும் பயன்படுத்திக்கொள்ளவே பார்ப்போம். இதை பிசிசிஐயிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்றார் மொயின்.

வாசிம் ஜாஃபர், ஆகாஷ் சோப்ரா உள்ளிட்ட முன்னாள் இந்திய வீரர்களும் ஆர்தரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்