மான்செஸ்டர்: இடைக்கால நிர்வாகியாக மைக்கல் கேரிக் நியமிக்கப்பட்டால் மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுவின் பயிற்றுநர்களில் ஒருவராகச் சேர்வதற்குத் தயாராக இருப்பதாக அக்குழுவின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் வெய்ன் ரூனி தெரிவித்துள்ளார்.
யுனைடெட் குழுவின் நிர்வாகிப் பதவியிலிருந்து ரூபன் அமோரிம் கடந்த வாரம் திடீரென விலகினார்.
அக்குழுவில் 13 ஆண்டுகாலம் விளையாடிய ரூனி, 559 ஆட்டங்களில் 253 கோல்களை அடித்துள்ளார். ஆட்டக்காரராக 2021ல் ஓய்வை அறிவித்த ரூனி, அதன்பின் டார்பி கவுன்டி, டிசி யுனைடெட், பர்மிங்ஹம் சிட்டி, பிளிமத் அர்கைல் ஆகிய குழுக்களின் நிர்வாகியாகச் செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில், மைக்கல் கேரிக்கின் பயிற்றுநர் குழுவில் இடம்பெறுவீர்களா என பிபிசி கேட்டதற்கு, “உறுதியாக இணைவேன்,” என்று ரூனி பதிலளித்தார்.
“ஆயினும், யுனைடெட்டில் வேலை வேண்டும் என நான் கெஞ்சவில்லை. அவர்கள் விரும்பினால் நான் இணைவேன் என்பது எல்லார்க்கும் தெரியும். நிர்வாகியை நியமிப்பதுதான் மிக முக்கியம்,” என்றார் 40 வயதான ரூனி.
கடந்த 2018ல் காற்பந்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, ஜோசே மொரின்யோ, ஒலே குனார் சோல்சியார் ஆகிய நிர்வாகிகளின்கீழ் யுனைடெட்டுடன் தொடர்ந்து இணைந்திருந்தார் கேரிக்.
2021ல் சோல்சியார் நீக்கப்பட்ட பிறகு, குறுகிய காலத்திற்கு யுனைடெட்டின் நிர்வாகியாக அவர் செயல்பட்டார். அதன்பின் 2022 அக்டோபர் முதல் 2025 ஜூன் வரை அவர் மிடல்புரோ குழுவின் நிர்வாகிப் பதவியை வகித்தார்.
இந்நிலையில், யுனைடெட் நிர்வாகிப் பதவிக்குக் கேரிக் பொருத்தமானவராக இருப்பார் என்று ரூனி தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் புள்ளிப் பட்டியலில் ஏழாம் இடத்தில் இருக்கும் யுனைடெட், வரும் சனிக்கிழமை (ஜனவரி 17) மான்செஸ்டர் சிட்டி குழுவை எதிர்த்தாடவிருக்கிறது.

