அர்ஜென்டினா காற்பந்து அணி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியதை அந்நாட்டு மக்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர். கத்தாரில் நடந்த உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் பெனால்டி வாய்ப்புகளில் அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வென்றது.
கடைசியாக 1986ஆம் ஆண்டில், அதாவது இப்போதைய அணித்தலைவர் லயனல் மெஸ்ஸி பிறப்பதற்குமுன் உலகக் கிண்ணம் வென்றிருந்தது அர்ஜென்டினா.
இந்நிலையில், 36 ஆண்டுகால ஏக்கம் தீர்ந்ததால் தென்னமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் தெருவெங்கும் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. தலைநகர் பியூனஸ் அய்ரசில் உள்ள நான்முகத் தூண் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாட்டத்தில் இறங்கினர்.
அதேபோல், 1986ஆம் ஆண்டு கிண்ணம் வென்று தந்த முன்னாள் நட்சத்திரம் டியேகோ மரடோனாவின் வீட்டிற்கு முன்பும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடிக் களித்துத் திளைத்தனர்.
"பெரும் பதற்றத்திற்குப்பின் கிட்டிய பேரின்பம் இது," என்றார் வழக்கறிஞரான நிக்கலஸ் பிரி, 46.
முன்னதாக, கூடுதல் நேரம்வரை சென்ற ஆட்டம் 3-3 எனச் சமநிலையில் முடிந்தது. அர்ஜென்டினா தரப்பில் அணித்தலைவர் லயனல் மெஸ்ஸி இரு கோல்களையும் ஏங்கல் டி மரியா ஒரு கோலையும் அடித்தனர். பிரான்ஸ் தரப்பில் மூன்று கோல்களையும் அடித்து 'ஹாட்ரிக்' சாதனை புரிந்தார் இளம் வீரர் கிலியன் எம்பாப்பே.
தனது முதல் ஆட்டத்தில் சவூதி அரேபியாவிடம் தோற்றபோதும் அர்ஜென்டினா எழுச்சியுடன் ஆடி சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

