27 ஓட்டங்களுக்குச் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்; 70 ஆண்டுகளில் ஆக மோசம்

2 mins read
d491fe0e-7766-4c87-a64e-35f7864a79c1
தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருதைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

கிங்ஸ்டன்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 1955ஆம் ஆண்டிற்குப் பின் ஆகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையைப் பதிவுசெய்து தலைக்குனிவைச் சந்தித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி.

ஒருகாலத்தில் பிற அணிகளுக்கெல்லாம் கொடுங்கனவாகத் திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நாலாவது இன்னிங்சில் 27 ஓட்டங்களுக்குச் சுருண்டது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே ஆகக் குறைந்த இரண்டாவது ஓட்ட எண்ணிக்கை. இதற்குமுன் 1955ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 26 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்திருந்தது.

தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஒன்பது ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதிலும், 15 பந்துகளில் அவர் ஐந்து விக்கெட்டுகளைச் சாய்த்தது குறிப்பிடத்தக்கது. அவரே ஆட்டநாயகன், தொடர்நாயகன் விருதுகளைக் கைப்பற்றினார்.

இன்னோர் ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளரான ஸ்காட் போலண்ட் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார்.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 225 ஓட்டங்களையும் வெஸ்ட் இண்டீஸ் 143 ஓட்டங்களையும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 121 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

அதனையடுத்து, 204 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், 14.3 ஓவர்களிலேயே 27 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அவ்வணியில் ஏழு பேர் ஓர் ஓட்டங்கூட எடுக்காமல் ஆட்டமிழந்தனர். ஜஸ்டின் கிரீவ்ஸ் (11) மட்டுமே இரட்டை இலக்கத்தை எட்டினார்.

இதனையடுத்து, 176 ஓட்ட வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.

முதலிரு போட்டிகளிலும் வென்றிருந்ததால் அவ்வணி 3-0 என்ற கணக்கில் ஒட்டுமொத்தமாகத் தொடரைக் கைப்பற்றியது.

அடுத்ததாக, வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இம்மாதம் 21ஆம் தேதி தொடங்குகிறது.

குறிப்புச் சொற்கள்