டி20 உலகக் கிண்ணம்: அரையிறுதியில் இந்திய அணி போராடி தோல்வி

டி20 உலகக் கிண்ணம்: அரையிறுதியில் இந்திய அணி போராடி தோல்வி

2 mins read
d274576c-2b90-4eb2-b728-479c17d055dc
போட்டிக்கு முந்திய நாள்களில் காய்ச்சல் கண்டு, முழு உடற்தகுதி பெறாதபோதும் அரையிறுதியில் அரைசதம் விளாசிய இந்திய அணித்தலைவி ஹர்மன்பிரீத் கவுர். படம்: ஏஎஃப்பி -
multi-img1 of 2

கேப்டவுன்: மகளிர் உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஐந்து ஓட்ட வித்தியாசத்தில் நடப்பு வெற்றியாளரான ஆஸ்திரேலியாவிடம் மண்ணைக் கவ்வியது.

நேற்றிரவு (23-02-2023) நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் வெல்ல நல்ல வாய்ப்பிருந்தும் இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை.

முதலில் பந்தடித்த ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களை எடுத்தது. ஆஸ்லி ஹீலி (25 ஓட்டங்கள்), பெத் மூனி (54 ஓட்டங்கள்), ஆஷ்லி கார்ட்னர் (31 ஓட்டங்கள்), அணித்தலைவி மெக் லேனிங் (ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்கள்) ஆகியோர் சிறப்பாகப் பந்தடித்தனர்.

எப்போதும் சிறப்பாகப் பந்துவீசும் ரேணுகா சிங் இம்முறை நான்கு ஓவர்களில் 41 ஓட்டங்களை வாரிவழங்கினார். ஆஸ்திரேலிய அணி கடைசி ஐந்து ஓவர்களில் 59 ஓட்டங்களைக் குவித்தது.

இலக்கை விரட்டிய இந்திய அணிக்குத் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை.

ஷஃபாலி வர்மா (9), ஸ்மிரிதி மந்தானா (2), யாஸ்திகா பாட்டியா (4) என மூவர் அடுத்தடுத்து வெளியேறினர். அப்போது இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை 28 மட்டுமே.

ஆயினும், ஜெமிமா ரோட்ரிகெஸ்ஸுடன் இணைந்த அணித்தலைவி ஹர்மன்பிரீத் கவுர் இந்திய அணியைச் சரிவிலிருந்து மீட்டார். இருவரும் சேர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு 69 ஓட்டங்களைச் சேர்த்தார்.

ஜெமிமா 43 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், ஹர்மன்பிரீத்தின் ஓட்டம் சேர்க்கும் விகிதம் குறையவில்லை.

அவ்வேளையில்தான் துரதிர்ஷ்டம் தேடி வந்தது. இரண்டாவது ஓட்டம் எடுக்க ஓடியபோது, ஹர்மன்பிரீத்தின் மட்டை மண்ணில் சிக்கிக்கொண்டதால் எதிர்பாராத வகையில் அவர் 'ரன் அவுட்' முறையில் ஆட்டமிழக்க நேர்ந்தது.

இதுவே ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

அப்போது, இந்திய அணி வெற்றி பெற 32 பந்துகளில் 41 ஓட்டங்களை எடுத்தாக வேண்டியிருந்தது; ஐந்து விக்கெட்டுகளும் எஞ்சியிருந்தன.

ஆனாலும், பின்வரிசை ஆட்டக்காரர்கள் நெருக்கடிக்கு இரையாகிவிட, இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

போட்டி முடிந்தபின் பேசிய ஹர்மன்பிரீத், "இதைவிட துரதிர்ஷ்டசாலியாக நாங்கள் இருக்க முடியாது," என்று சொல்லி ஆதங்கப்பட்டார்.

கடந்த டி20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றுப்போனது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து ஏழாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள ஆஸ்திரேலிய அணி, இதுவரை ஐந்து முறை கிண்ணம் வென்றுள்ளது.

இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் பொருதவுள்ளன. இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.