தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேரளா செல்லும் அர்ஜென்டினா காற்பந்து அணி!

2 mins read
0b1d7180-09a4-4e89-910e-b4b3eedf6abf
2022 இறுதியில் கத்தாரில் நடந்த உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரில் லயனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வாகை சூடியது. - கோப்புப்படம்: ஏஎஃப்பி

திருவனந்தபுரம்: உலகக் கிண்ணக் காற்பந்து வெற்றியாளரான அர்ஜென்டினா அடுத்த ஆண்டு இந்தியா செல்லவுள்ளது.

அவ்வணி பங்குகொள்ளும் இரண்டு நட்புமுறை ஆட்டங்கள் 2025ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் நடைபெறும் என்று அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் வி. அப்துரகிமான் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு அக்டோபரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கேரளாவிற்கு வருகைதரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜென்டினா காற்பந்துச் சங்கத்துடன் இணையவழி நடத்தப்பட்ட சந்திப்பின்போது இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

கேரள அரசு விடுத்த அழைப்பை ஏற்று, ஜூன் மாதம் வருவதற்குத் தயாராக இருப்பதாக அர்ஜென்டினா தெரிவித்தது. ஆனால், ஜூன் மாதம் கேரளத்தில் பருவமழைக் காலம் என்பதால், வேறு மாதத்தில் வரும்படி கேரள அரசுத் தரப்பு கேட்டுக்கொண்டது.

அதனைத் தொடர்ந்து, 2025 அக்டோபரில் அர்ஜென்டினா அணியின் கேரள சுற்றுப்பயணத்தை அந்நாட்டுக் காற்பந்துச் சங்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக அமைச்சர் அப்துரகிமான் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கேரளத்தில் காற்பந்துத் திறனாளர்களை வளர்க்க, அம்மாநிலத்துடன் பங்காளித்துவம் செய்துகொள்ள அர்ஜென்டினா ஆர்வமாக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

“கேரள அரசாங்கத்தின் ‘கோல்’ திட்டத்தின்கீழ் 5,000 குழந்தைகளுக்கு அர்ஜென்டினா காற்பந்துச் சங்கம் பயிற்சி வழங்கும்,” என்று அவர் கூறினார்.

அர்ஜென்டினா காற்பந்துச் சங்கத்தின் அனைத்துலக உறவுகளுக்கான தலைவர் பாப்லோ ஜோக்குவின் டியாஸ், கேரள விளையாட்டு, இளையர் விவகாரத் துறைச் செயலாளர் பிரணாப்ஜோதி நாத், கேரளக் காற்பந்துச் சங்கத் தலைவர் நவாஸ் மீரான் ஆகியோர் அந்த இணையவழிச் சந்திப்பில் பங்கேற்றதாக ‘மனோரமா’ செய்தி தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்