தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலக வெற்றியாளர்கள் செல்சி

1 mins read
41cb0db5-6276-443c-a33d-28fc7f8f16fc
குழுக்களுக்கான உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது செல்சி. - படம்: ஏஎஃப்பி

ஈஸ்ட் ருத்தர்ஃபர்ட்: அனைத்து கண்டங்களையும் சேர்ந்த முன்னணி காற்பந்துக் குழுக்கள் பங்கேற்ற கிளப் வோர்ல்ட் கப் எனப்படும் குழுக்களுக்கான உலகக் கிண்ணத்தை செல்சி கைப்பற்றியுள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி திங்கட்கிழமை (ஜூலை 14) நடைபெற்ற போட்டியின் இறுதியாட்டத்தில், பிரான்சின் பிஎஸ்ஜியை 3-0 எனும் கோல் கணக்கில் திக்குமுக்காடச் செய்தது இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் குழுவான செல்சி. பிஎஸ்ஜி, சென்ற பருவத்தின் யூயேஃபா சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்ற குழுவாகும்.

செல்சி வாகை சூடிய பிறகு பெரும் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டார் அதன் நிர்வாகி என்ஸோ மரெஸ்கா. குழுக்களுக்கான உலகக் கிண்ணத்தை வெல்வது, யூயேஃபா சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வெல்வதற்கு சமம் என்று அவர் கருத்துரைத்தார்.

முதன்முறையாக 32 குழுக்களுடன் நடந்தது குழுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டி. வடிவத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள இப்போட்டி இனி நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.

“இப்போட்டி சாம்பியன்ஸ் லீக்கைவிட, அல்லது அதே அளவாவது முக்கியமானதாக இருக்கும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்,” என்றார் மரெஸ்கா. செல்சி நிர்வாகியாகப் பொறுப்பேற்ற பிறகு கடந்த மே மாதம் ஐரோப்பிய கான்ஃபரன்ஸ் லீக் கிண்ணத்தை வென்ற மரெஸ்கா இப்போது இப்போட்டியிலும் வாகை சூடி அசத்தியிருக்கிறார்.

குழுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டி இறுதியாட்டத்தில் கோல் பாமர் (Cole Palmer) செல்சிக்கு இரண்டு கோல்கள் போட்டார். மூன்றாவது கோலை ஜொவாவ் பெட்ரோ போட்டார்.

குறிப்புச் சொற்கள்