உலகக் கிண்ண வெற்றியாளராக அர்ஜென்டினா காற்பந்து அணி புதிதாக மகுடம் சூடியதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் உள்ள சில்லறை விற்பனைக் கடைகளில் அர்ஜென்டின காற்பந்து உடைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
இங்குள்ள பல கடைகளில் அர்ஜென்டின காற்பந்து உடைகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
தேவை அதிகரித்து இருப்பதை உணர்ந்துள்ள சில விற்பனையாளர்கள், உடைகளின் விலையைக் கணிசமாக அதிகரிக்கவும் செய்துள்ளனர். கேரோசெல் போன்ற இணைய விற்பனைத் தளங்களில் அர்ஜென்டின ஆடைகள் $500 முதல் $5,000 விலை போகின்றன.
அதிகரித்துவரும் தேவையை ஈடுசெய்ய அர்ஜென்டின ஆடைகளைக் கடைக்காரர்கள் வரவழைக்கின்றனர். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அவை இங்கு வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

