கேன்சஸ் சிட்டி: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறுதியாட்டத்தில் சுவிட்சர்லாந்தை 3-1 எனும் கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது நடப்பு வெற்றியாளர் அணியான அர்ஜென்டினா.
ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் லிவர்பூல் நட்சத்திரம் அலெக்சிஸ் மெக்காலிஸ்டர் அர்ஜென்டினாவை முன்னுக்கு அனுப்பினார்.
பிறகு விட்டுக்கொடுக்காமல் ஆடிய சுவிட்சர்லாந்து ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தியது. டேன் இன்டோயி கோலைப் போட்டார்.
பிறகு அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பிரீல் எம்போலோ சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு ஆட்டத்திலிருந்து நீக்கப்பட்டார்.
ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது. கூடுதல் நேரத்தில் ஜூலியன் அல்வாரெஸ், லாவ்டாரோ மார்ட்டினெஸ் ஆகியோர் கோல்களைப் போட்டு அர்ஜென்டினாவை வெல்லச் செய்தனர்.
இங்கிலாந்து வெற்றி
சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) காலை நடந்த மற்றொரு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் நார்வேயை 2-1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது இங்கிலாந்து.
ஆட்டத்தில் முதலில் நார்வே முன்னுக்குச் சென்றது. அதற்குப் பிறகு ஜூட் பெல்லிங்கம் இரு கோல்களைப் போட்டு இங்கிலாந்தை வெல்லச் செய்தார்.
ஆட்டம் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்ததால் வெற்றிபெறும் அணியைத் தீர்மானிக்க ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்றது. கூடுதல் நேரம் தொடங்கி சிறிது நேரத்தில் பெல்லிங்கம் வெற்றி கோலைப் போட்டார்.
ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் நார்வேயின் அண்ட்ரெயாஸ் ஷெல்டரூப் அற்புதமான கோலைப் போட்டு நார்வேயை முன்னுக்கு அனுப்பினார். பிறகு முற்பாதியாட்டம் முடிவுறும் தறுவாயில் பெல்லிங்கம் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.
ஆட்டம் கூடுதல் நேரத்துக்குச் சென்று மூன்றே நிமிடங்களில் பெல்லிங்கம் வெற்றி கோலைப் போட்டார்.
2018ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இங்கிலாந்து 2022 போட்டியில் காலிறுதிச் சுற்றில் வெளியேறியது. இம்முறை அது மீண்டும் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது.
அரையுறுதிச் சுற்று
அரையிறுதிச் சிற்றில் பரம வைரிகளான இங்கிலாந்தும் அர்ஜென்டினாவும் மோதவுள்ளன. மற்றோர் அரையிறுதியாட்டத்தில் பிரான்சும் ஸ்பெயினும் சந்திக்கும்.

