உலகக் கிண்ணம் 2026: ‘ஃபிஃபா’விடம் புகாரளிக்கவுள்ள ஈரான்

உலகக் கிண்ணம் 2026: ‘ஃபிஃபா’விடம் புகாரளிக்கவுள்ள ஈரான்

1 mins read
30fb0a81-7b05-4500-8930-db3e185cdb8d
இவ்வாண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்துடன் மோதியது ஈரான். - படம்: ஏஎஃப்பி

டிஹுவானா: தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் தொடர்பில் ஈரான் அணி, ஃபிஃபா எனும் அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்திடம் புகாரளிக்கவுள்ளது.

போட்டியின்போது தாங்கள் பயணக் கட்டுப்பாடுகளை எதிர்நோக்குவதாக ஈரான் புகாரளிக்கவுள்ளதென அந்நாட்டுக் காற்பந்துச் சங்கத்தின் பேச்சாளர் வியாழக்கிழமை (ஜூன் 18) தெரிவித்தார்.

“போட்டிக்கான தங்களது தயாரிப்பு அட்டவணையை முன்கூட்டியே சமர்ப்பித்திருந்தபோதிலும், ஈரான் தேசியக் காற்பந்து அணிமீது ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றனர். அதனால் செயல்பாட்டுக் குழு அதன் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது,” என்று அந்தப் பேச்சாளர் கூறினார்.

பெல்ஜியத்துடன் மோதவுள்ள ஈரான்

ஈரான், தனது அடுத்த உலகக் கிண்ண ஆட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் பெல்ஜியத்துடன் மோதுகிறது. மெக்சிகோவின் டிஹுவானா நகரில் செயல்பட்டுவரும் ஈரான், அந்த ஆட்டத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்னரே அமெரிக்காவுக்குப் புறப்படத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக ஈரானிய காற்பந்துச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

“அந்த ஆட்டம் லாஸ் ஏஞ்சலிசில் உள்ளூர் நேரப்படி நண்பகல் 12 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை மூன்று மணி) நடைபெறவுள்ளதால் அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பே அங்குச் செல்ல ஈரானியக் காற்பந்துச் சங்கம் அனுமதி கோரியிருந்தது,” என்றார் அந்தப் பேச்சாளர். எனினும், செயல்பாடுகள் தொடர்பான காரணங்களை விளக்கியபோதும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

ஈரானின் குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மறுத்துவருகிறது.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டுகாற்பந்துஉலகக் கிண்ணம்ஈரான்அமெரிக்காமெக்சிகோகட்டுப்பாடு