உலகக் கிண்ணம் 2026: மெக்சிகோ சென்றடைந்தது ஈரானிய அணி

உலகக் கிண்ணம் 2026: மெக்சிகோ சென்றடைந்தது ஈரானிய அணி

2 mins read
e17e4052-c39a-47c7-8137-38f829b08aa7
மெக்சிகோவின் டிஹுவானா அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்த ஈரானியக் காற்பந்து அணி. - படம்: இபிஏ

டிஹுவானா: இவ்வாண்டின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் பங்கேற்பதற்காக ஈரானிய அணி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) மெக்சிகோவைச் சென்றடைந்தது

ஈரான் போரினால் அந்நாட்டு அணி இப்போட்டியில் பங்கேற்பது தொடர்பில் சிக்கல்கள் தொடர்கின்றன. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகியவை இணைந்து போட்டியை ஏற்று நடத்துகின்றன.

இந்நிலையில், ஈரான் தற்காப்பு ஆட்டக்காரர் எஹ்சான் ஹஸ்சாஃபி அனைத்துலகக் காற்பந்துக் கூட்டமைப்பைப் பற்றிக் குறைகூறியுள்ளார். அணியைச் சேர்ந்த சிலருக்கு அமெரிக்க விசா வழங்கப்படாமல் இருந்ததைத் தொடர்ந்து அவர் அவ்வாறு பேசினார்.

ஈரானிய அணி பயிற்சி மேற்கொள்ள அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் டக்சன் நகரில் இடம் தரப்பட்டிருந்தது. ஆனால், விசாவை முன்னதாகவே வழங்காததால் ஈரானுக்கான பயிற்சியிடம் மெக்சிகோவின் டிஹுவானா நகருக்கு மாற்றப்பட்டது.

டிஹுவானா, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்துக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான எல்லைப் பகுதிக்கு அருகே அமைந்துள்ளது.

“அணி ஒருவழியாக வந்தடைந்ததை எண்ணி நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார் ஹஸ்சாஃபி.

“நல்ல வேளையாக அணி மிகவும் சிறந்த நிலையில் உள்ளது. நடந்த எல்லாவற்றையும் தாண்டி விசாக்கள் ஒருவழியாக வழங்கப்பட்டன. எனினும், அனைத்துலகக் காற்பந்துக் கூட்டமைப்பைப் பற்றி எனக்கு ஒரு குறை உள்ளது. ஏன் இத்தனை காலம் ஆனது? எனக்குத் தெரிந்தவரை விளையாட்டாளர்கள், பயிற்றுவிப்பாளர் அணியில் சிலர் ஆகியோருக்குத்தான் விசா வழங்கப்பட்டது,” என்று ஹஸ்சாஃபி குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ், சியேட்டல் நகரங்களில் ஈரான் ஆட்டங்கள் ஆடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஈரானின் ஒட்டுமொத்த அணியில் சிலருக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை.

ஈரானிய காற்பந்துக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஹெதாயத் மொம்பெய்னி, தணைத் தலைவர் மெஹ்தி முகம்மது நபி ஆகியோர் விசா கிடைக்காதோரில் அடங்குவர்.

“அணியில் முக்கியப் பங்கு வகிக்கும், பயிற்றுவிப்பாளர் அணியில் உள்ள சிலருக்கு விசா வழங்கப்படவில்லை,” என்று ஹஸ்சாஃபி கூறினார்.

“இந்த விவகாரத்தைக் கவனித்துக்கொள்ளுமாறு நான் அனைத்துலகக் காற்பந்துக் கூட்டமைப்பை வேண்டுகிறேன். அப்போதுதான், வரும் நாள்களில் இதற்குத் தீர்வு எட்டப்படும் என நான் நம்புகிறேன்,” என்றும் அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்
விளையாட்டுகாற்பந்துஈரான்மெக்சிகோஉலகக் கிண்ணம்அமெரிக்காவிசா