உலகக் கிண்ணக் காற்பந்து 2026: முதல் ஆட்டத்தில் மெக்சிகோவைச் சந்திக்கும் தென்னாப்பிரிக்கா

2 mins read
f2db0eb1-42d0-4cdd-ad93-8bec27097c8d
2026 ஃபிஃபா உலகக் கிண்ண இறுதிச் சுற்றுக்கான குழுப் பட்டியலை நிர்ணயிக்கும் குலுக்கலின்போது மேடையில் தோன்றிய (இடமிருந்து) ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோர். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: உலகக் கிண்ணக் காற்பந்து 2026 போட்டிகளின் முதல் ஆட்டத்தில் மெக்சிகோவும் தென்னாப்பிரிக்காவும் ஜூன் 11ஆம் தேதி சந்திக்கின்றன. ஆட்டம் மெக்சிகோவின் அஸ்டெக்கா விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கிறது. இரண்டாம் ஆட்டத்தில் தென் கொரியாவும் தகுதிபெறும் இன்னொரு குழுவும் பொருதும்.

அமெரிக்கா, மெக்சிகோ, கனடா மூன்றும் இணைந்து உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்துகின்றன. வரலாற்றிலேயே ஆகப் பெரிய போட்டி இது. மொத்தம் 48 குழுக்கள் பங்கெடுக்கின்றன. அவை 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 42 குழுக்கள் முடிவாகிவிட்டன. எஞ்சிய குழுக்களுக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெறுகின்றன.

உலகக் கிண்ணப் போட்டிகளில் ஒவ்வொரு குழுவும் எந்தெந்த அணிகளுடன் மோதப்போகின்றன என்பது வா‌ஷிங்டனில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) நடைபெற்ற குலுக்கல் நிகழ்ச்சியில் தெரியவந்தது.

குலுக்கல் அமெரிக்காவுக்குச் சாதகமாக அமைந்தது. முதல் நிலையில் அமெரிக்கா படுத்தப்பட்டு இருப்பதும் அதற்கு ஒரு காரணம். அமெரிக்காவின் பிரிவில் பராகுவே, ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் முதல் ஆறு நிலைகளுக்குள் வரும் இன்னொரு குழுவும் இடம்பெறும்.

கனடாவின் பிரிவில் சுவிட்சர்லாந்தும் கத்தாரும் உள்ளன. எஞ்சிய இடம் தகுதிபெறும் மற்றொரு குழுவுக்குச் செல்லும். அந்த இடத்தை இத்தாலி பிடிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விருதைத் தற்காக்கும் அர்ஜென்ட்டினா முதலில் அல்ஜீரியாவுடன் மோதுகிறது. அதே பிரிவில், ஆஸ்திரியாவும் ஜோர்தானும் இடம்பெற்றுள்ளன.

ஐந்து முறை உலகக் கிண்ணத்தை வென்றுள்ள பிரேசில், மொரோக்கோவுடன் பொருதுகிறது. பின்னர் அது ஹைட்டியையும் ஸ்காட்லாந்தையும் சந்திக்கும்.

பிரான்ஸ் அதன் முதல் ஆட்டத்தில் செனகலை எதிர்கொள்கிறது. நார்வே இடம்பெற்றுள்ள அதே பிரிவின் இன்னொரு குழு எது என்பது தகுதிச்சுற்று ஆட்டங்களுக்குப் பிறகு தெரியவரும்.

குரோவே‌ஷியாவுக்கு எதிராகப் போட்டியை ஆரம்பிக்கும் இங்கிலாந்து, பின்னர் பனாமாவையும் கானாவையும் எதிர்கொள்ளும்.

ஜெர்மனி இடம்பெற்றிருக்கும் பிரிவில் எக்குவடோரும் ஐவரி கோஸ்ட்டும் உள்ளன. அதே பிரிவில், மிகச் சிறிய நாடான கியூரசாவும் இருக்கிறது. அதன் மக்கள்தொகை 150,000 மட்டுமே.

உலகத் தரவரிசையில் முதல் நிலையில் இருக்கும் ஸ்பெயினின் பிரிவில் கேப் வெர்ட், சவூதி அரேபியா, உருகுவே ஆகியவை உள்ளன.

இன்னொரு பிரிவில் நெதர்லாந்து, ஜப்பான், துனிசியா ஆகியவற்றுடன் தகுதிபெறும் மற்றொரு குழு இணைந்துகொள்ளும்.

பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூசிலாந்து ஆகியவை மற்றொரு பிரிவில் அங்கம் வகிக்கின்றன. போர்ச்சுகல், உஸ்பெக்கிஸ்தான், கொலம்பியா ஆகியவற்றுடன் தகுதிபெறும் இன்னொரு குழுவும் சேர்ந்துகொள்ளும்.

குறிப்புச் சொற்கள்