வரலாற்று நாயகர்களுக்கான ஆறுதல் பரிசு

வரலாற்று நாயகர்களுக்கான ஆறுதல் பரிசு

2 mins read
3cc5ada6-4a2f-4d95-8b9b-22d35b2fedb4
-

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் ஆறுதல் பரிசாகக் கருதப்படும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் களமிறங்கவுள்ளன குரோவேஷியா, மொரோக்கோ.

போட்டியின் அரையிறுதிச் சுற்றில் தோல்வியடைந்த இவ்விரு அணிகளும் மூன்றாம் இடத்தைத் தீர்மானிக்கும் ஆட்டத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 17) மோதுகின்றன.

போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்த அணிகள் இவ்வளவு தூரம் வரும் என்று பலரும் எதிர்பார்க்கவில்லை.

சென்ற போட்டியில் காற்பந்து வரலாற்றில் முதன்முறையாக இறுதியாட்டம் வரை முன்னேறிய குரோவேஷியா இம்முறையும் சிறப்பாகச் செய்தது ஆச்சரியம் தரும் ஒன்று.

இப்படிப்பட்ட சூழலில் மூன்றாவது இடத்தைப் பிடிப்பதற்கான ஆட்டம் அர்த்தமற்றது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார் குரோவேஷிய வீரர் ஆண்ட்ரெய் கிராமாரிச்.

"உலகக் கிண்ணப் போட்டியில் பதக்கம் வெல்லும் விளையாட்டாளர்கள் அவரவர் நாட்டில் வீரர்களாகக் கருதப்படுவர். அதனால் அவர்கள் (மொரோக்கோ விளையாட்டாளர்கள்) தங்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்க விளையாடுவர். அதைத்தான் நாங்களும் செய்யப்போகிறோம்," என்றார் கிரமாரிச்.

அரையிறுதிச் சுற்று வரை முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை மொரோக்கோ பெற்றிருப்பது அந்த கண்டத்திற்கும் அரபு உலகிற்கும் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதப்பட்ட பெல்ஜியம், ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய மூன்று அணிகளையும் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது மொரோக்கோ. அரையிறுதிச் சுற்றில் நடப்பு வெற்றியாளர் பிரான்சிடம்தான் தோல்வியடைந்தது. அந்த ஆட்டத்திலும் பிரான்சை எளிதில் வெற்றியடைய விடவில்லை மொரோக்கோ.

ஏற்கெனவே இவ்வாண்டு உலகக் கிண்ணப் போட்டியின் முதல் சுற்றில் குரோவேஷியாவும் மொரோக்கோவும் சந்தித்திருக்கின்றன. அந்த ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது.