முதல் அணியாக இரண்டாம் சுற்றில் நுழைந்தது மெக்சிகோ

உலகக் கிண்ணக் காற்பந்து 2026

முதல் அணியாக இரண்டாம் சுற்றில் நுழைந்தது மெக்சிகோ

2 mins read
832af946-11ef-43b4-86a1-d9b76a107527
தென்கொரியாவிற்கு எதிரான ஆட்டத்தில் கோலடித்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் மெக்சிகோ அணியினர். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

குவாடலஹாரா (மெக்சிகோ): உலகக் கிண்ணக் காற்பந்துத் தொடரை ஏற்றுநடத்தும் நாடுகளில் ஒன்றான மெக்சிகோ, முதல் அணியாக இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்தது.

‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள அவ்வணி, வெள்ளிக்கிழமை (ஜூன் 19) நடந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவைத் தோற்கடித்தது.

இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கி ஐந்தாவது நிமிடத்தில் அந்த வெற்றி கோலைப் போட்டார் லூயிஸ் ரோமோ.

தனது முதல் ஆட்டத்தில் அவ்வணி 2-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வென்றது.

இதனையடுத்து, ஆறு புள்ளிகளுடன் பிரிவில் முதலிடத்தில் இருக்கும் மெக்சிகோ, அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது.

இதனிடையே, செக் குடியரசும் தென்னாப்பிரிக்காவும் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

வரும் புதன்கிழமை நடக்கவுள்ள அடுத்த ஆட்டத்தில் மெக்சிகோ, செக் குடியரசை எதிர்த்தாடவுள்ளது. மூன்று புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள தென்கொரியா, தென்னாப்பிரிக்காவுடன் பொருதவுள்ளது.

கனடா கோல் மழை

வெள்ளிக்கிழமை நடந்த ‘பி’ பிரிவு ஆட்டமொன்றில், ஜோனத்தன் டேவிட் ‘ஹாட்ரிக்’ கோலடிக்க, கனடா 6-0 என்ற கோல் கணக்கில் கத்தாரைத் துவைத்தெடுத்தது.

போதாக்குறைக்கு, இருவர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டதால் கத்தார் அணி ஒன்பது பேருடன் விளையாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

போட்டியை ஏற்றுநடத்தும் அணிகளில் ஒன்றான கனடாவிற்கு இந்த வெற்றி பெருமகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும் அதன் முக்கிய மத்தியத் திடல் ஆட்டக்காரர் இஸ்மாயில் கோனே காயமடைந்து வெளியேறியது அவ்வணிக்குப் பின்னடைவாக அமைந்தது.

இன்னொரு ‘பி’ பிரிவு ஆட்டத்தில், சுவிட்சர்லாந்து 4-1 என்ற கோல் கணக்கில் போஸ்னியாவை வெற்றிகொண்டது.

அப்பிரிவில் கனடாவும் சுவிட்சர்லாந்தும் நான்கு புள்ளிகளுடன் முறையே முதலாம், இரண்டாம் இடங்களில் உள்ளன. இம்மாதம் 24ஆம் தேதி வான்கூவரில் நடக்கவிருக்கும் ஆட்டத்தில் அவ்விரு அணிகளும் மோதவிருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்
உலகக் கிண்ணம்காற்பந்துமெக்சிகோதென்கொரியாகனடாசுவிட்சர்லாந்து