நியூயார்க்: உலகக் கிண்ணக் காற்பந்தின் ‘எல்’, ‘கே’ பிரிவு ஆட்டங்கள் புதன்கிழமை (ஜூன் 24) அதிகாலை நடந்தன.
‘எல்’ பிரிவின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும் கானாவும் மோதின. ஹேரி கேன், ஜூட் பெல்லிங்ஹம் எனப் பல முன்னணி நட்சத்திரங்களைக் கொண்டுள்ள இங்கிலாந்து அணி எளிதாக கானாவை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டம் கோல் ஏதும் இல்லாமல் சமநிலையில் முடிந்தது.
கடந்த வாரம் குரோவேஷியாவுடன் விளையாடிய ஆட்டத்தில் இங்கிலாந்து நான்கு கோல்கள் அடித்து அசத்தியது. ஆனால் இந்த ஆட்டத்தில் கானாவின் தற்காப்பைத் தகர்க்க முடியாமல் அது திணறியது.
அதேபோல் கானாவுக்குக் கிடைத்த சில வாய்ப்புகளை அது தவறவிட்டது. இருப்பினும் ஆட்டம் சமநிலையில் முடிந்ததில் கானவுக்கே அதிக லாபம்.
இங்கிலாந்து வரும் 28ஆம் தேதி பனாமாவை எதிர்கொள்கிறது.
‘எல்’ பிரிவின் இரண்டாவது ஆட்டத்தில் குரோவேஷியாவும் பனாமாவும் மோதின. இங்கிலாந்துடன் முதல் ஆட்டத்தில் தோற்றதால் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் குரோவேஷியா களமிறங்கியது.
ஆட்டத்தின் முதல்பாதியில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. இருப்பினும் இரண்டாம் பாதியில் குரோவேஷியா அதிரடி காட்டியது. 54வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை அது கோலாக மாற்றியது. இறுதியில் அது 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
குரோவேஷியா வரும் 28ஆம் தேதி கானாவைச் சந்திக்கிறது. இதில் கானா சமநிலை கண்டால் அது அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இதற்கிடையே, ‘கே’ பிரிவில் கொலம்பியாவும் காங்கோவும் மோதின.
பரபரப்பாகச் சென்ற அந்த ஆட்டத்தில் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் கொலம்பியா கோல் அடித்தது.
இந்த வெற்றியின் மூலம் கொலம்பியா அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

