மெக்சிகோ சிட்டி: ஆண்களுக்கான உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி வெள்ளிக்கிழமை (ஜூன் 12) அதிகாலை ஆரவாரத்துடன் மெக்சிகோவில் தொடங்கியது.
முதல் ஆட்டத்தில் மெக்சிகோ 2-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
சொந்த மண்ணில் நடக்கும் போட்டி என்பதால் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே மெக்சிகோ அதிரடியாக விளையாடியது. ஒன்பதாவது நிமிடத்தில் மெக்சிகோ முதல் கோலை அடித்தது.
பின்னர் 67வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பையும் மெக்சிகோ கோலாக மாற்றியது. இறுதிவரை போராடிய தென்னாப்பிரிக்காவால் கோல் ஏதும் புகுத்த முடியவில்லை.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் மூவருக்குச் சிவப்பு அட்டை வழங்கப்பட்டன.
தென்னாப்பிரிக்க விளையாட்டாளர் இருவரும் மெக்சிகோ விளையாட்டாளர் ஒருவரும் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டதால் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையே, வெள்ளிக்கிழமை நடந்த மற்றோர் ஆட்டத்தில் தென்கொரியா 2-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசை வீழ்த்தியது.
ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் கோல் அடித்து செக் குடியரசு முன்னிலை பெற்றது. இருப்பினும் தென்கொரியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து 67 மற்றும் 80வது நிமிடங்களில் அசத்தலாக கோல்களைப் புகுத்தி ஆட்டத்தைத் தன்வசப்படுத்தியது.

