வாஷிங்டன்: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் நடுவராகச் செயல்படுவதற்கு சோமாலியாவின் உமர் அப்துல்காதிர் அர்டானுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஏற்றுநடத்தும் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி சிங்கப்பூர் நேரப்படி ஜூன் 12ஆம் தேதி அதிகாலை 3 மணிக்குத் தொடங்கவுள்ளது.
இப்போட்டியில் பங்கேற்று, உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் பணியாற்றும் முதல் சோமாலிய நடுவர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்க திரு அர்டான் தயாராக இருந்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று (ஜூன் 6) துருக்கியின் இஸ்தான்புல்லிலிருந்து அமெரிக்காவின் மயாமி அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்த திரு அர்டானை, அமெரிக்கக் குடிநுழைவு, எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பினர்.
வழக்கமான கூடுதல் சோதனைகளுக்குப் பிறகே பாதுகாப்பு, குடிநுழைவுத் தரவுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
2025ஆம் ஆண்டின் சிறந்த ஆப்பிரிக்கக் காற்பந்து நடுவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு அர்டானிடம் முறையான அமெரிக்க விசா இருந்தபோதிலும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தலைமையிலான அரசாங்கத்தின் கடுமையான குடிநுழைவுக் கொள்கைகளும் சோமாலியா உள்ளிட்ட 12 நாடுகளின் குடிமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடைகளுமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனம் (ஃபிஃபா), போட்டியை ஏற்றுநடத்தும் நாட்டின் குடிநுழைவு விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் திரு அர்டானின் தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர் என்றும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

