காற்பந்து உலகம் கண்ணீருடன் இறுதிவிடை

காற்பந்து உலகம் கண்ணீருடன் இறுதிவிடை

1 mins read
7a13699f-64c4-41c5-88b8-1779f42e4667
பெலேவின் மறைவிற்கு அவர் பிறந்த பிரேசிலில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் காற்பந்து ரசிகர்கள் துக்கம் கடைப்பிடித்து வருகின்றனர். தமிழகத் தலைநகர் சென்னையில் அவரது உருவப்படத்திற்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தும் ரசிகர்கள். படம்: இபிஏ -

பிரேசில் காற்பந்து சகாப்தம் பெலே, தமது கடைசி ஆட்டத்தை 1977ல் விளையாடினார் - அவருடைய நியூயார்க் காஸ்மோஸ் குழுவிற்கும் அவருடைய இதயத்தில் நிறைந்திருந்த, பிரேசிலில் தமது காற்பந்து வாழ்க்கையைத் தொடங்கி, முடித்த இடமான சான்டோஸ் குழுவிற்கும் இடையிலான ஆட்டம் அது.

அந்த ஆட்டத்தில் முதல் பாதியில் காஸ்மோஸ் சார்பாகவும் இரண்டாம் பாதியில் சான்டோஸ் சார்பாகவும் பெலே விளையாடினார். இப்போது, பெலேவின் இறுதிச் சடங்கிற்காக சான்டோஸ் விளையாட்டரங்கம் தயாராகி வருகிறது.

கடந்த வியாழனன்று தமது 82 வயதில் காலமான பிரேசிலின் தேசிய புதையலாக விளங்கிய பெலேவின் நல்லுடல் நாளை மறுநாள் காலை சான்டோசுக்குக் கொண்டு செல்லப்படும்.

அங்குள்ள விலோ பெல்மிரோ விளையாட்டரங்கத் திடல் நடுவே பெலேவின் நல்லுடல் தாங்கிய சவப்பெட்டி வைக்கப்படும்.

திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 24 மணி நேரத்திற்கு அவரது நல்லுடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு வைக்கப்பட்டிருக்கும்.

சான்டோஸ் நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக பெலேவின் நல்லுடலை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

பின்னர் அங்குள்ள 14 தளங்களைக் கொண்ட நெக்ரோபோல் எக்யூமெனிக்கா கல்லறைத் தோட்டத்தில் அவரது நல்லுடல் அடக்கம் செய்யப்படும்.

கடந்த 2020ஆம் ஆண்டு உயிரிழந்த தம் இளைய சகோதரர் ஸோக்காவிற்கும் 2006ஆம் ஆண்டு இறந்துபோன தம் மகள் சாண்ட்ராவிற்கும் அருகே அவர் நல்லடக்கம் செய்யப்படுவார்.

முன்னதாக, பெலேவின் இறப்பை அடுத்து, அவருக்கு மூன்று நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று பிரேசில் அரசாங்கம் அறிவித்திருந்தது.