சென்னை: உலக டெஸ்ட் வெற்றியாளர் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. சென்னை - சேப்பாக்கத்தில் பங்ளாதேஷை வீழ்த்தி உலக டெஸ்ட் வெற்றியாளர் 2023 - 25 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை இந்திய அணி தக்க வைத்துள்ளது.
சேப்பாக்கம் டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஐசிசியின் உலக டெஸ்ட் வெற்றியாளர் புள்ளிகள் பட்டியலில் 86 புள்ளிகள் மற்றும் 71.67 விழுக்காட்டுடன் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது. 62.50 விழுக்காட்டுடன் இரண்டாம் இடத்தில் நடப்பு வெற்றியாளரான ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸ்திரேலிய அணியை காட்டிலும் 9.17 விழுக்காட்டில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த 19ஆம் தேதி நீண்ட டெஸ்ட் போட்டிகள் கொண்ட பருவத்தைத் தொடங்கியது. இதில் பங்ளாதேஷ் - 2 போட்டிகள், நியூசிலாந்து - 3 போட்டிகள் என இந்தியாவிலும், ஆஸ்திரேலிய நாட்டில் பங்ளாதேஷ் அணியுடன் 5 போட்டிகளிலும் விளையாட உள்ளது. இது இந்திய அணிக்கு உலக டெஸ்ட் வெற்றியாளர் புள்ளிகள் பட்டியலில் புள்ளிகளைப் பெறுவதற்கான மிக முக்கிய தருணமாக அமைந்துள்ளது.
இந்த டெஸ்ட் பருவம் இந்தியாவுக்கு முக்கியமானதாகவும் உள்ளது. இதில் சிறந்து விளங்கினால் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் வெற்றியாளர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறலாம். இதுவரை இரண்டு முறை நடைபெற்றுள்ள உலக டெஸ்ட் வெற்றியாளர் இறுதிப் போட்டியில் இந்தியா விளையாடி உள்ளது.
நியூசிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, பங்ளாதேஷ், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டிஸ் அணிகள் உலக டெஸ்ட் வெற்றியாளர் புள்ளிகள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.