புதுடெல்லி: உலகக் கிண்ணம் வென்ற ஸ்பானியக் காற்பந்து அணியில் இடம்பெற்றிருந்த ஸாவி ஹெர்னாண்டஸ், இந்தியக் காற்பந்து அணியின் பயிற்றுநர் பதவிக்கு விண்ணப்பம் செய்துள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று இந்தியக் காற்பந்துக் கூட்டமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
விண்ணப்பதாரர்களின் பட்டியலில் ஸாவியின் பெயர் இடம்பெற்றுள்ளதாக இந்திய அணியின் இயக்குநர் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது. அவரை நியமிப்பது செலவுமிக்கது என்றும் அவர் சொன்னதாக அச்செய்தி குறிப்பிட்டது.
“ஸ்பானியப் பயிற்றுநர்களான பெப் கார்டியோலா, ஸாவி கார்டியோலாவின் பெயர்கள் தாங்கிய விண்ணப்பங்கள் எங்களது மின்னஞ்சலுக்கு வந்தன. அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த இயலவில்லை. அவை உண்மையானதாகத் தெரியவில்லை,” என்று ஓர் அறிக்கை வழியாக இந்தியக் காற்பந்துக் கூட்டமைப்பு விளக்கமளித்துள்ளது.
கார்டியோலா, ஸாவி இருவரும் முன்னணி ஸ்பானியக் குழுவின் பார்சிலோனாவின் முன்னாள் பயிற்றுநர்கள். கார்டியோலா தற்போது மான்செஸ்டர் சிட்டி குழுவிற்குப் பயிற்சியளித்து வருகிறார்.
இந்நிலையில், இந்திய ஆடவர் காற்பந்து அணியின் பதவிக்கு 170 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களிலிருந்து பத்துப் பேர் அடுத்தகட்ட பரிசீலனைக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ள நிலையில், இறுதிப் பட்டியலில் மூவர் மட்டுமே இடம்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய அணியின் பயிற்றுநர் பதவியிலிருந்து இகோர் ஸ்டிமச் நீக்கப்பட்டு, ஸ்பெயினின் மனோலா மார்க்கெஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இம்மாதம் தமது பதவியைத் துறந்த மார்க்கெஸ், மீண்டும் எஃப்சி கோவா குழுவுடன் இணைந்தார்.