ஐபிஎல் போட்டிக்காக 10ஆம் வகுப்புத் தேர்வைத் தவிர்க்கும் இளம் வீரர்

ஐபிஎல் போட்டிக்காக 10ஆம் வகுப்புத் தேர்வைத் தவிர்க்கும் இளம் வீரர்

1 mins read
00c1642d-2c08-4e9e-a870-2867b874b528
ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி. - படம்: ராஜஸ்தான் ராயல்ஸ்

மும்பை: இவ்வாண்டு மார்ச் மாதக் கடைசி வாரத்தில் இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவுள்ளன.

அந்தப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படும் நோக்கில் தயாராகி வருகிறார் இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி.

இந்நிலையில், போட்டி காரணமாகத் தமது பத்தாம் வகுப்புத் தேர்வைத் தவிர்க்க சூர்யவன்ஷி முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

14 வயது சூர்யவன்ஷி, கிரிக்கெட் உலகின் அடுத்த தலைமுறை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாகப் பந்தடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் அவர்.

அதேபோல், அண்மையில் நடந்து முடிந்த 19 வயதிற்குட்பட்டோர்க்கான உலகக் கிண்ணத் தொடரிலும் அசத்தினார். அவரது அதிரடி ஆட்டத்தால் இந்தியா கிண்ணத்தைக் கைப்பற்றியது.

அந்தத் தொடரில் சூர்யவன்ஷி ஏழு ஆட்டங்களில் 439 ஓட்டங்கள் விளாசினார். இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும், தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காகத் தொடர் நாயகன் விருதையும் அவர் கைப்பற்றினார்.

பிப்ரவரி 17ஆம் தேதிமுதல் மார்ச் 11ஆம் தேதிவரை நடைபெறவுள்ள பத்தாம் வகுப்புத் தேர்வை சூர்யவன்ஷி எழுதுவதாக இருந்தது.

இந்நிலையில் , “இந்த முறை சூர்யவன்ஷி பத்தாம் வகுப்புத் தேர்வைத் தவிர்த்துவிட்டு ஐபிஎல் பருவத்திற்காகத் தயாராகிறார். தற்போது நாக்பூரில் உள்ள அவர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார்,” என்று அவரது பயிற்றுநர் மனிஷ் ஓஜா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சூர்யவன்ஷி விளையாடி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்