மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில், நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துவந்த 17 வயது இளையர் பென் ஆஸ்டின், கிரிக்கெட் பந்து தாக்கியதால் மாண்டுவிட்டார். அதுகுறித்து அவரின் குடும்பத்தார் மனம் உடைந்துபோயிருக்கின்றனர்.
சம்பவம் மெல்பர்னில் டி20 போட்டிக்கு முன்பு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) நடந்தது. பென் ஆஸ்டின் தலைக்கவசத்துடன் பயிற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது தானியக்க முறையில் பந்துவீசும் கருவியிலிருந்து வந்த பந்து அவரின் கழுத்துப் பகுதியைத் தாக்கியது.
கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் வியாழக்கிழமை காலை மரணமடைந்தார்.
“இந்தத் துயரமான சம்பவம் பென்னை எங்களிடமிருந்து பிரித்துவிட்டது. பல கோடைகாலங்களில் அவர் இவ்வாறு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றுள்ளார். அவரின் மரணத்தால் மனவேதனை அடைந்திருக்கின்றோம்,” என்று அவரின் தந்தையார் ஜேஸ் ஆஸ்டின் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
‘கிரிக்கெட் விக்டோரியா’ விளையாட்டு நிர்வாக அமைப்பு, நாடு முழுதும் உள்ள கிரிக்கெட் சமூகத்தினர் பென்னின் மரணத்திற்காகத் துக்கம் அனுசரிப்பதாகக் கூறியுள்ளது.


