திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற கிராமசபைக் கூட்டம் நேற்று கோவை தொண்டா முத்தூரில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் "வரும் நான்கு மாதங்களில் அதிமுக ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டப்படும். தமிழகத்தில் கோவையில்தான் ஊழல் அதிகமாக உள்ளது. அதற்குக் காரணம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிதான்," என்றார்.
இதையடுத்து, கூட்டத்தில் இருந்த மக்களிடம் ஸ்டாலின் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது, கூட்டத்தில் இருந்து எழுந்த பெண் ஒருவர் "இந்த கூட்டத்தை ஏன் நடத்துகிறீர்கள்," என ஸ்டாலினிடம் கேட்டார்.
அப்போது, நீங்கள் எந்த ஊர் என ஸ்டாலின் கேட்டதைத் தொடர்ந்து மைல்கல் என்று பெண் கூறினார். அது எந்தத் தொகுதியில் வருகிறது என ஸ்டாலின் கேட்டதும், கோபமடைந்த பெண் இது கூட தெரியாமல்தான் நீங்கள் துணை முதல்வராக இருந்தீர்களா? என திருப்பிக் கேட்டார்.
இதையடுத்து, அவர் கோவை சுகுணாபுரம் அதிமுக மகளிர் அணியைச் சேர்ந்த பூங்கொடி, 40, எனத் தெரியவந்ததால் அவரை அங்கிருந்து வெளியேற்றினர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து தொண்டாமுத்தூரில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

