புதுச்சேரி: இந்தியாவிலேயே முதல்முறையாக புதுச்சேரியில் முதல்கட்டமாக 50,000 ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனால், அங்கு வசிக்கும் பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி நிலவியது.
புதுச்சேரியில் கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், 21 வயதுக்குமேல் 55 வயதிற்குள் இருக்கும் அரசின் மாதாந்திர உதவித் தொகை பெறாத வறு மைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 வீதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கதிர்காமம் அரசுப் பெண்கள் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தத் திட்டத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதன்பின்னர் ஆளுநர் தமிழிசை பேசுகையில், "பெண்களின் கையில் பணம் இருந்தால் அது சுயநலமாக இருக்காது. அது குடும்பத்துக்காகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்து இந்த அரசு கொடுத்துள்ளது. பொதுவாக பெண்கள் தங்களுக்காக உதவி கேட்கமாட்டார்கள். குடும்பத்துக்காக, கணவனுக்காக, குழந்தைக்காகவே உதவி நாடுவார்கள். எனவே, அப்படிப்பட்ட பெண்களுக்கு உதவி செய்வதில் தவறே இல்லை. புதுச்சேரி அரசு அறிவிக்காத திட்டங்களையும் செய்கிறது. சில அரசு அறிவித்த திட்டங்களைக்கூட செய்வதில்லை. புதுவை போல் வேறு எந்த மாநிலத்திலும் குடியரசுத் தினத்தையொட்டி இதுபோல் பரிசு கிடைத்ததில்லை," என்றார்.
முதல்வர் ரங்கசாமி பேசுகையில், "உதவி ஏதும் கிடைக்காத ஏழைப் பெண்களுக்கு தற்போது மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 50,000 குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 தருகிறோம். இதற்கென ரூ.5 கோடி ஒதுக்கியுள்ளோம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் பிப்ரவரிமாதம் மடிக்கணினி, மிதிவண்டிகளை வழங்க நிதி ஒதுக்கி உள்ளோம். கடந்த ஆட்சியில் விடுபட்ட திட்டங்களையும் கண்டிப்பாகச் செயல்படுத்துவோம்," என்று தெரிவித்தார்.

